புத்ராஜெயா, ஜனவரி 20 – சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுப் படி மறுதேர்தல் விவகாரம் முடியும் வரை, மஇகாவில் தேசியத் தலைவர் செய்த புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது என சங்கப் பதிவகம் அதிரடியாக இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கடிதம் குறித்து மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறுகையில், “மஇகா பிரச்சனைகள் முடியும் வரை புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது என சங்கப் பதிவகம் கடிதம் அனுப்பியுள்ளது உறுதி தான். தற்போது அந்த புதிய நியமனங்கள் மூலம் மஇகா-வில் பொறுப்பு வகிப்பவர்கள் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், புதிய தலைமைச் செயலாளர் குமார் அம்மான் உள்ளிட்ட, புதிய மத்திய செயலவை உறுப்பினர் நியமனங்கள் யாவும் செல்லாது என்பது உறுதியாகியுள்ளது.
மஇகா தேர்தல் முறைகேடுகளை விசாரணை செய்த சங்கப் பதிவகம், 90 நாட்களுக்குள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில், கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இதுவரை மறுதேர்தல் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை.
இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் இருக்கும் பழனிவேல் மலேசியா திரும்பியவுடன் மீண்டும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கின்றார். மீண்டும் இன்னொரு முறை பேச்சுவார்த்தை நடத்த அவரின் வருகைக்காக காத்திருக்கிறோம். மிகக் குறைவான நாட்களே உள்ளதால், நாங்கள் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் 2015 -ம் ஆண்டிற்கான நிதிநிலை குறித்து சிறப்பு அறிவிப்புகளை செய்துள்ளார். என்றாலும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் வெளிநாடு சென்றுள்ள காரணத்தால் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.