லண்டன், ஜனவரி 21 – இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று நீக்கியது. இந்திய அதிகாரிகளின் தொடர் வலியுறுத்தல் மற்றும் முயற்சிகளின் பலனாக இந்த தடை நீக்கப்பட்டு இருப்பது, இந்திய விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகின்றது. சுமார் 60 முதல் 70 ஆயிரம் டன் மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நான்கு காய்கனிகளை கடந்த 2014 ஆண்டு மே மாதம் 1-ம் தேதி முதல் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்தது.
இதையடுத்து இந்தியா தரப்பில் தடையை நீக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உணவு மற்றும் கால்நடை அதிகாரிகள் குழு இந்தியா வந்தது.
அவர்கள் அல்போன்சா மாம்பழம் உள்ளிட்ட காய்கனிகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளை பார்வையிட்டனர். மேலும், அவர்களின் கேள்விகளுக்கு இந்திய அதிகாரிகள் திருப்திகரமான பதிலை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று புரூசெல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய ஆணையக் குழுவின் கூட்டத்தில், இந்திய மாம்பழங்கள் மீதான தடையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், காய்கறிகளை இறக்குமதி செய்வது தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு மேலும் சில ஆதாரங்களை பரிசீலித்த வருவதாகவும் அந்த குழு அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான காய்கனிகளில் 50 சதவீதம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக இந்திய தரப்பில் பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மாம்பழங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதால், விரைவில் இதர தடைகளும் நீக்கப்படும் என நம்பப்படுகின்றது.