சென்னை, ஜனவரி 21 – நடிப்பு என்று வந்துவிட்டால் தான் ஒரு பேராசை பிடித்த சுயநல நடிகன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். ‘ராஞ்சனா’ படம் மூலம் பாலிவுட் சென்ற தனுஷ் தற்போது ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பால்கி இயக்கிய இந்த படத்தின் மூலம் கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இது பற்றி தனுஷ் கூறுகையில்,
“கோலிவுட்டில் செய்த தவறுகளை நான் பாலிவுட்டில் செய்ய மாட்டேன். பாலிவுட்டில் ஷமிதாபை விட எனக்கு வேறு எந்த படமும் சிறப்பான இரண்டாவது படமாக அமைய முடியாது”.
“நான் கதாநாயகன் இல்லை. ராஞ்சனா படத்திற்கு பிறகு அதே போன்று கதாபாத்திரங்கள் தான் வந்தன. அதில் சில எனக்கு பொருத்தமாக இருந்தன”.
“நான் பேராசை பிடித்த சுயநல நடிகன். ஷமிதாபில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான் என்னை பால்கியிடம் ஒப்படைத்துவிட்டேன். அமிதாப் பச்சன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்களுடன் பணியாற்றியது கனவாக உள்ளது”.
“அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுகையில் சற்று பயமாக இருந்தது. அமிதாப் பச்சன் நடித்த படங்களின் மறுபதிப்பில் நான் நடிக்க மாட்டேன். அவரை போன்று என்னால் நடிக்க முடியாது”.
“அவர் நடித்த படங்களில் ‘ஷோலே’ மற்றும் ‘தீவார்’ ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை பொறுத்த வரையில் எனக்கு கோலிவுட்டும் சரி, பாலிவுட்டும் சரி இரண்டுமே முக்கியம் தான்” என்றார் தனுஷ்.