புதுடெல்லி, ஜனவரி 22 – நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவிக்காலத்தின் போது நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இதனால் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் அவருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷார் ஊழலின் பல்வேறு அம்சங்கள் குறித்து முதலில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதாக தெரிகிறது. வரும் 27-ஆம் தேதிக்குள் விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால்,
அதற்கு முன்பாக இந்த விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால், இதனை மன்மோகன்சிங்கின் உதவியாளர் மறுத்துள்ளார்.