புதுடெல்லி, ஜனவரி 22 – இந்திய குடியரசு தின விழாவை சிறப்பிக்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை எதிர்த்து எல்லையில் தீவிரவாதிகளை அனுப்ப ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் இந்த திட்டம் குறித்து இந்திய உளவுத் துறை இந்திய அரசை எச்சரித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் 25-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
இதையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் பங்குபெறும் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பிற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத் கடும் குளிர், பனிமூட்டத்தை பயன்படுத்தி காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் அனைத்துலக எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் தனது பதவி காலத்தில் இரு முறை இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை. ஒபாமாவின் இந்திய வருகைக்குப் பிறகு, இந்தியா-அமெரிக்காவின் உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.