புதுடில்லி, ஜனவரி 25 – இந்தியாவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவியோடு இன்று காலை புதுடில்லி வந்தடைந்தார்.
அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “பாலம்” விமான நிலையத்தில் கட்டிப் பிடித்து வரவேற்றார். மோடியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவிருக்கும் ஒபாமா நாளை நடைபெறும் இந்தியக் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்வார்.
மோடியின் அழைப்பை ஏற்று, இந்திய குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டு பார்வையிடும் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா திகழ்கின்றார்.
இன்று காலை 9.40 மணியளவில் புதுடில்லி விமான நிலையத்தில் தனது ஏர் ஃபோர்ஸ் 1 (Air Force One) – எனப்படும் அமெரிக்க அதிபருக்கான பிரத்தியேக விமானத்தில் வந்திறங்கிய ஒபாமா, சில நிமிடங்களுக்குள்ளாக வரவேற்பு சம்பிராதயங்களை முடித்துக் கொண்டு அவருக்காக காத்திருந்த ‘பீஸ்ட்’ (The Beast) என்ற பிரத்தியேகக் காரில் புறப்பட்டுச் சென்றார்.
இந்தக் கார் ஒபாமா வருகையை முன்னிட்டு அமெரிக்காவிலிருந்து முன் கூட்டியே வரவழைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மட்டும் அவருக்கு 7 சந்திப்புகள் அணிவகுத்து நிற்கின்றன என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒபாமாவும் மோடியும் கைகுலுக்கிக் கொண்டும், சிரித்து உரையாடுவதுமாக, நெருக்கமான, பழைய நண்பர்களைப் போல் பழகினர் என தகவல் ஊடகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறுகிய காலத்தில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருகை தரும் அமெரிக்க அதிபராக ஒபாமா திகழ்கின்றார்.
ஒரு கால கட்டத்தில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மோடி பிரதமரான பின், அவருக்கும் ஒபாமாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தின் காரணமாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கைகள் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்துள்ளன.
இதற்கிடையில் இந்தியாவின் புகழ் பெற்ற யோகா குருவான ராம்தேவ் பாபா, “யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் மிச்சல் ஒபாமாவையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்” என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.