Home தொழில் நுட்பம் ஐபோன் 6-க்குப் போட்டி: ‘எம்ஐ நோட்’-ஐ களமிறக்கிய சியாவுமி!

ஐபோன் 6-க்குப் போட்டி: ‘எம்ஐ நோட்’-ஐ களமிறக்கிய சியாவுமி!

661
0
SHARE
Ad

பெய்ஜிங், ஜனவரி 25 – ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், ஐபோன் 6-ஐ விட மிகவும் மெலிதான, விலை குறைவான பேப்லெட்டுகளை சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் சியாவுமி வெளியிட்டுள்ளது. ‘எம்ஐ’ (Mi) பேப்லெட்களின் அறிமுக விழாவில், சியாவுமி நிறுவனம் தனது பேப்லெட்களை ஐபோன்களுடன்  நேரடியாகவே  ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

xiaomi-logo

‘பேப்லெட்’ (Phablet) என்பது திறன்பேசிகள் மற்றும் ‘தட்டைக் கணினி’ (Tablet)-களின் சிறப்பு அம்சங்களை ஒருங்கே இணைக்கப் பெற்ற ஒரு கருவியாகும். சியாவுமி ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டி அளிக்கும் வகையில் அதனைத் தயாரித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெய்ஜிங்கில் கடந்த வாரம் நடந்த அறிமுக விழாவில் தனது பெருமைக்குரிய தயாரிப்புகளான ‘எம்ஐ நோட்’ (Mi Note) மற்றும் ‘எம்ஐ நோட் ப்ரோ’ (Mi Note Pro) பேப்லெட்களை சியாவுமி வெளியிட்டுள்ளது.

16 ஜிபி நினைவகம் கொண்ட எம்ஐ நோட் பேப்லெட்டுகள், ஐபோன் 6 ஐ விட எடை குறைவானதாகவும், அவற்றின் விலையில் பாதி மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சியாவுமி நிறுவனம் கூறியுள்ளது.

எம்ஐ நோட் பேப்லெட்டுகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி சியாவுமி கூறியதாவது:-

“புதிய எம்ஐ பேப்லெட்கள், ஒரு வினாடிக்கு 450 எம்பி பதிவிறக்க வேகத்தை கொடுக்கும் 4ஜி சிப்களைக் கொண்டுள்ளன. இதன் வேகத்திற்கு முக்கிய காரணம் ’64 பிட் ஸ்நாப்டிராகன் ப்ராஸசர்’  (64 bit Snapdragon processor) ஆகும். 64 ஜிபி உள் நினைவகம் கொண்டுள்ளதால், எண்ணற்ற செயலிகளையும் தகவல்களையும் பயனர்கள் சேமிக்க இயலும். மேலும், ‘முதன்மை நினைவகம்’ (RAM) 4ஜிபி அளவிற்கு இருப்பதால், செயலிகளின் வேகம் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன்களுடன் ஒப்பீடு:

சியாவுமி நிறுவனம், தங்கள் எம்ஐ நோட் பேப்லெட்களை ஐபோன்களுடன் ஒப்பிட்டாலும், ஆப்பிள் ஒவ்வொருமுறையும் தனது ஐபோன்களில் கொண்டுவரும் புத்தாக்கமும், மேம்பாடுகளும் மிகச் சிறப்பானதாக இருக்கும். ஆப்பிளுக்கு தொழில்நுட்ப ரீதியாக போட்டி அளிக்க சியாவுமி நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதற்குள் ஆப்பிள் தொழில்நுட்பங்களில் உச்சத்தை அடைந்து விடும் என்று தொழில்நுட்ப நோக்கர்கள் கூறுகின்றனர்

எனினும் விலையை ஒப்பிடுகையில், சியாவுமி மலிவு விலையில் நிறைந்த தொழில்நுட்பங்களை ஆப்பிளுக்கு நிகராக கொடுக்கிறது. உதாரணமாக சியாவுமி திறன்பேசிகளில் உள்ள கேமரா தொழில்நுட்பங்களை சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இதுபோன்ற தொழில்நுட்ப சிறப்புகள் அறிந்த நடுத்தர வர்க்க மக்கள், சியாவுமியையே நாடுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் சியாவுமி தனது தடத்தை பதிக்க நீண்ட காலமானாலும், முக்கிய சந்தைகளான சீனா மற்றும் இந்தியாவில் தனது இடத்தை நிரந்தரமாக பதித்துள்ளது.