கோலாலம்பூர், பிப்ரவரி 4 – வேகமாக வளர்ந்து வரும் மலேசியக் கலைத்துறையில் தினம் தினம் புதிய படங்களும், குறும்படங்களும் உருவாகி வருகின்றன. அதனை விட வேகமாக அப்படங்களைப் பற்றிய செய்திகளும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:-
சுந்தராவின் ‘மோஸ்ட் வாண்டட்’ இசை
“ஜோக்கான சாரி மாக்கான்”, “கனவே கனவே”, “சொட்டு சொட்டா” இந்த பாடல்களை நினைவிருக்கிறதா? …. மலேசியாவில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த பிரபல பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர் சுந்தரா, தற்போது ‘முத்துக்குமார் வாண்டட்’ என்ற படத்தின் மூலமாக தமிழகத் திரையுலகில் கால்பதித்துள்ளார்.
மலேசியா, இந்தியா இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தனது ஆஸ்தான பாடலாசிரியரான கோக்கோ நந்தாவுடன் இணைந்து, அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் நரேஸ் ஐயர் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள் சுந்தராவின் இசையில் பாடியுள்ளனர். குறிப்பாக நரேஸ் ஐயர் பாடியுள்ள ‘ஆதாம் எனக்கெனவே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை கேட்ட போதே அந்த பாடலின் இனிமை ரசிக்க வைத்தது. இந்நிலையில் ‘இசை க்ராஃப்ட்’ என்ற தனது நிறுவனத்தின் பெயரில் செயல்படும் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் நாளை முழு பாடலையும் வெளியிடப்போவதாக சுந்தரா அறிவித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள, ‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடையும் பட்சத்தில், தமிழ்நாட்டின் ‘மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளர்கள் பட்டியலில் மலேசிய இசையமைப்பாளர் சுந்தராவுக்கும் ஓர் அழகிய இடம் காத்திருக்கின்றது.
சர்ச்சையில் ‘டேக்ஸி வண்டி’ பாடல்
கேஷ் வில்லன்ஸ் இசையில் அண்மையில் வெளியான ‘பெருசு’ என்ற இசைத்தொகுப்பில் ‘டேக்ஸி வண்டி’ என்ற பாடல் இப்போது மலேசியா எங்கும் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. தினமும் பலர் பேஸ்புக்கில் அந்தப் பாடலைப் பற்றி பேசுவதைக் காண முடிகின்றது.
அதன் இசை, காட்சியமைப்புகளால் ஒருவகையில் அப்பாடல் பிரபலமடைந்தது என்றால், அப்பாடலை முன்வைத்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளாலும் நாளுக்கு நாள் அப்பாடல் யூடியூபில் பிரபலமடைந்து வருகின்றது. ஜனவரி 27-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த பாடலை இதுவரை 38,307 பேர் பார்வையிட்டுள்ளனர்.
அப்பாடலில் அப்படி என்ன சர்ச்சை என்றால், அஸ்ட்ரோ அறிவிப்பாளராகவும், ‘மைந்தன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தவருமான நடிகை ஷாமினி ராமசாமி இந்த பாடலில் ஒரு காட்சியில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
இந்த பாடலில் ஜோய் ராசன், லோகேஸ்வரி ராஜேந்திரன், ஷர்மிளா ராம், டாவினா கூ, மேனகா கிரேசிசிக் உள்ளிட்ட நடிகைகளும் நடித்திருந்தாலும், ஷாமினி வரும் காட்சியில் மட்டும் கவர்ச்சி சற்று கூடுதலாக இருப்பதால், “மலேசிய இந்தியக் கலாச்சாரத்திற்கு இது தேவையா?” என்று பல கேள்விகளுடன் பேஸ்புக்கில் கடும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஆனால், ஷாமினி தரப்பிலோ, தான் அதை ஒரு கலையாகத் தான் பார்ப்பதாகவும், இயக்குநர் சொல்வதைக் கேட்டு அந்த காட்சிக்கேற்ப தான் நடித்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வெளிச்சம் – 13 பாகம்
இயக்குநர் வி.நாகராஜ் இயக்கத்தில், பாடலாசிரியர் யுவாஜியின் எழுத்தில், ‘வெளிச்சம்’ என்ற புதிய தொடர் ஒவ்வொரு செவ்வாய்கிழமை மாலை 4.00 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளது.
மொத்தம் 13 பாகங்கள் கொண்ட இந்த தொடரை மதர்லேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மலேசிய இந்தியர்களின் வரலாறு, குப்பன் சுப்பன், வெற்றி நிச்சயம், பிரச்சனையின் தீர்வு என நான்கு அங்கங்களைக் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அங்கத்திலும் பல பயனுள்ள தகவல்கள்இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக ‘வெற்றி நிச்சயம்’ அங்கத்தில் நாட்டில் பல துறைகளிலும் வெற்றியடைந்தவர்கள் தாங்கள் கடந்த வந்த பாதையையும், அதில் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எம்ஜி குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த தொடரில் நடிகர் பாலகணபதி வில்லியம் தொகுப்பாளராகவும், துணை இயக்குநர்களாக கேஜி குமார் மற்றும் ரகுவரன் மோகனும் பணியாற்றியுள்ளனர்.
இது தவிர, மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர்.
விக்னேஸ் லோகராஜின் டிஎம்எஸ்
‘அறிந்தும் அறியாமலும்’, ‘நேற்று அவள் இருந்தாள்’ என அடுத்தடுத்த வெற்றிக் குறும்படங்களை இயக்கிய விக்னேஷ் லோகராஜ் தனது அடுத்த குறும்படத்திற்குத் தயாராகி விட்டார்.
‘திட்டமிட்ட சதி’ சுருக்கமாக டிஎம்எஸ் என்று தனது புதிய படத்திற்குப் பெயர் சூட்டியுள்ள விக்னேஷ், தனது அபிமான நடிகர்களை வைத்து படப்பிடிப்பு வேலைகளையும் துவங்கிவிட்டார். இந்த குறும்படத்தில் 1 நிமிடம் 30 நொடிகளுக்கு பாடல் ஒன்று இருப்பதாகவும், ஆனால் அந்த பாடல் படத்தில் இடம் பெறாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் மகேசன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதோடு, விலாஷா என்ற புதுமுகம் ஒருவரும் கதாநாயகியாக அறிமுகம் ஆகின்றார்.
டீம்வொர்க் ஸ்டூடியோஸ் மற்றும் இமேஜினரி கலர் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இந்த படம் நிறைவடைந்த பிறகு, முழுநீளப் படம் தயாரிக்கும் நோக்கமும் இருப்பதால் தற்போது தயாரிப்பாளரை தேடி வருகின்றது டிஎம்எஸ் குழு.
‘மாறிய தருணம்’ – விழிப்புணர்வு குறுப்படம்
படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல், இப்போதுள்ள மலேசியக் கலைஞரின் உழைப்பும், அற்பணிப்பும் ஒவ்வொரு படைப்பிலும் முன்பை விட சற்று கூடுதலாகி விட்டது என்று தான் கூற வேண்டும். ஏனோ தானோ என்று ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட காலங்கள் எல்லாம் கடந்து தற்போது குறும்படங்களின் வழியாக கூட பல நல்ல விசயங்களையும் மக்களுக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வகையில், 11 மணி நேரம் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தி இப்படத்தை வெற்றிகரமான காட்சிகளாக்கியுள்ளனர் ‘மாறிய தருணம்’ படக்குழுவினர். ஒருவகையான மன பாதிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை குறும்பட இயக்குநர் விக்னேஷ்வரன் விஜயன் இயக்கியுள்ளார். சூப் எப்எம் அறிவிப்பாளர் ஸ்ரீஷா கங்காதரன் இப்படத்திற்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக ஆஸ்தானா ஆர்ட்சை சேர்ந்த பிரபல கலைஞர் கண்ணன் நடித்துள்ளார். டைட்டஸ் தனராஜ் இசையமைத்துள்ளார். இதுதவிர குறும்பட இயக்குநர் ஜெய்கிஷான் ஆகியோரும் இப்படக்குழுவின் உள்ளனர்.
– ஃபீனிக்ஸ்தாசன்