Home நாடு பழனிவேலுவின் காலம் கடந்த எதிர் நடவடிக்கைகள்! பலன் தருமா?

பழனிவேலுவின் காலம் கடந்த எதிர் நடவடிக்கைகள்! பலன் தருமா?

504
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 27 – சனிக்கிழமை துணைத் தலைவர் டாக்டர் சுப்ராவின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொகுதித் தலைவர்கள் கூட்டத்தின் அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தொடர்ந்து, திடீரென உறக்கத்திலிருந்து விழித்தவர்போல் விறுவிறுவென்று அடுத்த கட்ட எதிர் நடவடிக்கைகளில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இறங்கி விட்டார்.

G.Palanivelமுதலாவதாக, சுப்ரா கூட்டிய கூட்டம் சட்டவிரோதமானது என பத்திரிக்கை அறிக்கை விட்டிருக்கின்றார். சட்டவிரோதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோசித்து வருகின்றேன் என்றும் பழனிவேல் கூறியிருக்கின்றார்.

சங்கப் பதிவதிகாரியையும், அமைச்சரையும் சந்திப்பேன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அடுத்ததாக, சிலாங்கூர் மாநிலத்தின் செயலாளர் பதவியிலிருந்து கே.ஆர். பார்த்திபனையும் நீக்கியிருக்கின்றார்.

ஆனால் இவையெல்லாம் காலம் கடந்த எதிர் நடவடிக்கைள் என்றே தோன்றுகின்றது.

பழனிவேலுவின் கவனக் குறைவால் விஸ்வரூபம் எடுத்த விவகாரம்

ஒரு தேசியத் தலைவர் என்ற முறையில் மிகச் சாதாரணமாக, வழக்கமாக இதுபோன்ற அறிக்கைகளின் வழி கட்சியினருடன் தொடர்பில் இருந்து வந்திருந்தால், பழனிவேலுவுக்கு கட்சியிலும் இத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது.

MIC-Logoகட்சிக்கு தற்போது ஏற்பட்டிருப்பது பழனிவேலுவின் தனிப்பட்ட தலைமைத்துவத்திற்கு விடப்பட்டிருக்கும் சவாலோ, அவரது தனிப்பட்ட அரசியல் பிரச்சனையோ அல்ல. ஒட்டு மொத்த கட்சியே பதிவு ரத்தாகும் ஒரு விவகாரத்தை வழக்கம்போல் அவர் மௌனம் காத்து தள்ளிப் போட்டு வந்ததால்தான் நிலைமை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கட்சியின் மற்ற முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்து இணைந்து அடுத்த கட்ட முடிவுகளை அவர் எடுத்திருந்தால், சுப்ரா தொகுதித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி கட்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது.

இப்போது எடுப்பதாக பழனிவேல் கூறியிருக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் சங்கப் பதிவதிகாரி கடிதம் கிடைத்த உடனேயே மேற்கொண்டிருந்தால், மற்ற தலைவர்களுடன் அப்போதே கலந்தாலோசித்து நடவடிக்கையில் இறங்கியிருந்தால் கட்சியின் நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது.

இருப்பினும், கட்சியில் பெரும்பான்மை செல்வாக்கை இழந்து விட்ட பழனிவேல், இனியும் தனது தேசியத் தலைவர் அதிகாரத்தைக் காட்டி கட்சிக்காரர்களை எச்சரித்துக் கொண்டிருக்க முடியாது – அதற்கான கால கட்டமும் தாண்டிவிட்டது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தொகுதித் தலைவர்களுடன் சுப்ரா நடத்திய வெற்றிகரமான சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து மேலும் குறைந்தது 20 தொகுதிகளின் தலைவர்கள் சுப்ரா அணியினரை அழைத்து தங்களின் ஆதரவைப் புலப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கூடுதலான தொகுதிகள் சுப்ராவுக்கு ஆதரவு 

articless-subramaniam1-020713_600_398_100இந்த 20 தொகுதிகள் சுப்ராவின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த தொகுதிகள் ஆகும். பழனிவேலுவின் தலைமைத்துவத்தை விரும்பாத இந்த தொகுதிகள், இருப்பினும் இப்போதைக்கு எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு இருப்போம் என முடிவெடுத்து நடப்பவற்றை கண்காணித்து வந்தார்கள்.

பெரும்பான்மை தொகுதித் தலைவர்கள் துணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டதும், அதிலும் பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட தொகுதித் தலைவர்கள் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் பல நடுநிலை தொகுதித் தலைவர்களின் மனங்களை மாற்றிவிட்டதாகவும், சுப்ராவுடன் இணைந்து கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு, மற்ற தலைவர்களுடன் இணைந்து கட்சியின் விவகாரங்களைக் களைவதை விட்டுவிட்டு, எதிர்ப்பும், விரோதமும் கலந்த போக்கை பழனிவேல் எடுக்க முற்பட்டால், தற்போது சுப்ராவின் தலைமையின் கீழ் திரண்டிருக்கும் எழுச்சி,

காலப்போக்கில் பழனிவேலுவின் தலைமைத்துவத்திற்கே எதிரான போராட்டமாக உருவெடுக்கலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.