புதுடெல்லி, ஜனவரி 29 – சுனந்தா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சசிதரூர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும், சட்டத்தை மதித்து நடந்து வருவதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூரின் மனைவி சுனந்தா, கடந்த வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என முதலில் தகவல் வெளியாகின. ஓராண்டு முடிவடைந்த நிலையில் சுனந்தா கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து சுனந்தாவின் வீட்டு வேலைக்காரர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய போலீசார், சசிதரூரை சமீபத்தில் விசாரித்தனர்.
சுனந்தா கொலை வழக்கு நடந்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சசிதரூர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எதிர்ப்புக்கள் வலுத்து வருகிறது.
எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் இதை வலியுறுத்தி வருகின்றனர். இது சசிதரூருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், சட்டத்துக்கு மதிப்பளித்து தான் நடந்து வருவதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார். சுனந்தா வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.