சென்னை, பிப்.28 – காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டதையொட்டி, விவசாயிகள் சார்பில் ஜெயலலிதாவுக்கு 7ம் தேதி தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை, பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில், சந்தித்து காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டனர்.
மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்ததற்கு தமிழக விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அதை ஏற்று ஜெயலலிதா, மார்ச் 7ம் தேதி தஞ்சாவூரில் நன்றி விழா நடத்த அனுமதி அளித்தார்.
எதிர்க் கட்சியினரும் பாராட்டு
செங்கம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ, டி.சுரேஷ்குமார், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கையும் மீறி, சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி சாதனை புரிந்தததற்காக தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
முன்னதாக நேற்று தி.மு.க.வைச் சேர்ந்த அரங்கநாயகம், வி.வி.சுவாமிநாதன் மற்றும் ராஜா முகம்மது ஆகியோரும் இதற்காக ஜெயலலிதாவை பாராட்டியுள்ளனர். கட்சி வேறுபாடு கடந்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் பாராட்டவேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
00:19:12 Thursday 2013-02-28
|