புதுடெல்லி, ஜனவரி 29 – டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிரண் பேடி, உதய் பார்க் பகுதியை குறிப்பிட்டு எண். டி.இசட்.டி 1656909 என்ற எண் தாங்கி ஒரு அடையாள அட்டையும், தால்கதோரா சந்து பகுதியை குறிப்பிட்டு எஸ்.ஜே.இ 0047969 எண்ணுடன் வேறு ஒரு அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார்.
இது தேர்தல் ஆணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தலாணைய அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, “இந்த விவகாரத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என கூறினார்.
தனது 2 அடையாள அட்டைகளில் ஒன்றினை ரத்து செய்ய கிரண் பேடி விண்ணப்பிக்காமல் இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.