ஷா ஆலம், ஜனவரி 30 – அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள காவல்துறை முன்னாள் அதிரடிப்படை வீரர் சைருல் அசார் (படம்), தாம் இனி நாடு திரும்பப் போவதே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவரது வழக்கறிஞர் மலாய் நாளேட்டிற்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றில், சைருலின் மனநிலையில் உள்ள எவரும் இத்தகைய முடிவைத்தான் எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அல்தான்துயா கொலை வழக்கில் சைருலுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டது தெரியவந்தது.
கடந்த 13ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் மரண தண்டனையை அறிவித்தபோது தான், சைருல் ஆஸ்திரேலியாவில் இருப்பது வெளியுலகிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மலேசிய அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே விசா மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸ்திரேலியாவின் குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் சைருல். அண்மையில் அவரது வழக்கறிஞர் ஹஸ்னாஸ் அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
“சைருலை சந்தித்தபோது அவரை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளேன். அதேசமயம் தான் இனி நாடு திரும்பப் போவதில்லை என அவர் என்னிடம் தெரிவித்தார். அவரது மனநிலையில் யார் இருந்தாலும் இப்படித்தான் கூறுவர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது,” என்றார் வழக்கறிஞர் ஹஸ்னாஸ்.