Home வணிகம்/தொழில் நுட்பம் அண்டிராய்டு பயனர்களை கவர்ந்திழுக்கும் ஐபோன் 6!

அண்டிராய்டு பயனர்களை கவர்ந்திழுக்கும் ஐபோன் 6!

558
0
SHARE
Ad

iPhone_6_iOS_8_Screens_Wideகோலாலம்பூர், பிப்ரவரி 4 – ஐபோன் 6-ன் வெளியீடு வர்த்தக ரீதியாக ஆப்பிள் நிறுவனத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பெரிதாக எதிர்பார்த்திருக்க வாய்ப்ப்புள்ளது. ஆனால், ஐபோன் 6 ஆப்பிள் மட்டுமல்லாது அதன் போட்டி நிறுவனங்களிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எனினும், ஐபோன் 6 அதன் போட்டி நிறுவனங்களில் ஏற்படுத்திய மற்றம் எதிர்மறையாக உள்ளது. சீனாவில் கடந்த இரண்டு வருடங்களாக கோலோச்சி வந்த சியாவுமி மற்றும் சாம்சுங் திறன்பேசிகளின் வர்த்தகம் ஐபோன் 6-ஆல் பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், உலக முழுவதும் அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள அண்டிராய்டின் பயனர்களின் எண்ணிக்கை, ஐபோன் 6-ன் வரவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள், புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஆப்பிள் உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லும் ‘ஆப்பிள் பே’ (Apple Pay) போன்ற திட்டங்கள், அண்டிராய்டு பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக நுகர்வோர் புலனாய்வு ஆராய்ச்சி பங்குதாரர்கள் (Consumer Intelligence Research Partners) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த காலாண்டில், அமெரிக்காவில் மட்டும் 19 சதவீத பயனர்கள் அண்டிராய்டில் இருந்து ஆப்பிள் திறன்பேசிகளுக்கு மாறி உள்ளனர். இந்த மாற்றம் உலக அளவில் பிரதிபலிக்கிறது. பல்வேறு நிறுவனங்களின் போட்டிகள் நிறைந்த உலக சந்தைகளிலும் இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கூக் கூறுகையில், “அண்டிராய்டில் இருந்து ஐபோனிற்கு மாறும் பயனர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளின் வரவே இதற்கு காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.

உலக சந்தைகளில் பெரும் வரவேற்பை பெற்ற ஐபோன் 6, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஆப்பிளுக்கு 74.6 பில்லியன் டாலர்கள் வருவாயை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.