வாஷிங்டன், பிப்ரவரி 4 – உலகின் முக்கிய மதத் தலைவர்கள் பங்கு கொள்ளும், தேசிய வருடாந்திர பிரார்த்தனை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி வாஷிங்டனில் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் புத்த மதத் தலைவர் தலாய்லாமா கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது அவர் ஒபாமாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திபெத்தியர்கள் நீண்ட நெடும் காலமாக முன் வைத்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தலாய் லாமா தலைமை தாங்கி வருகின்றார். இவர் தற்போது இமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார்.
உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் திபெத்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இது சீன அரசிற்கு கடும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள், தலாய்லாமாவிற்கு ஆதரவு அளிக்காத நிலையில், அவர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகிறார்.
இதுவரை மூன்று முறை தலாய்லாமா, ஒபாமாவை சந்தித்துள்ளார். எனினும், இந்த சந்திப்பிற்கு அமெரிக்காவே தலாய்லாமாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஒபாமாவும் கலந்து கொள்ள இருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, இந்த நிகழ்ச்சிக்காக தலாய்லாமாவிற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து சீனா கடும் கோபத்தில் இருப்பதாக சீன அரசுத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.