சான் ஓசே (கலிபோர்னியா) – கடந்த திங்கட்கிழமை ஜூன் 3-ஆம் தேதி தொடங்கிய ஆப்பிள் அனைத்துலக தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான மாநாட்டில் அந்நிறுவனத்தின் அடுத்த கட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் கண்டன.
ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் கையடக்கக் கருவிகளுக்கான அடுத்த கட்ட ஐஓஎஸ் 13 மென்பொருள் தொழில்நுட்பம் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் நுணுக்கங்கள் விளக்கப்பட்டன. வழக்கமாக இவ்வாறு அறிமுகம் காணும் ஆப்பிள் மென்பொருள் எல்லா வகை ஐபோன்களுக்கும் வழங்கப்படும்.
ஆனால், இந்த முறை அறிமுகம் கண்ட ஐஓஎஸ் 13, ஐபோன் 6 இரக கைத்தொலைபேசிகளுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, ஐபோன் 6 வைத்திருப்பவர்களுக்கு இது சங்கடமான செய்தியாகும். இவர்களுக்கு புதிய ஐஓஎஸ் 13-இன் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்காது. அப்படிக் கிடைக்க வேண்டுமானால், அவர்கள் புதிய ஐபோனுக்கு மாற வேண்டும்.
ஐபோன் 7 முதலான கைத்தொலைபேசிகளுக்கு மட்டுமே ஐஓஎஸ் 13-இன் பதிவிறக்கம் கிடைக்கும். அடுத்த மாதம் முதல் பயனர்கள் ஐஓஎஸ் 13 மென்பொருளைத் தங்களின் ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற அம்சங்களில் டார்க் மோட் எனப்படும் கருமையிலான திரை எழுத்துகள், புகைப்படம் எடுக்கும் குறுஞ்செயலியில் மேம்பாடுகள், வரைபடங்களின் கூடுதலான தகவல்கள், சாலைகளின் விரிவான விவரங்கள் ஆகியவையும் அடங்கும்.
ஐஓஎஸ் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபோன் 6 பயனர்கள் சமூக ஊடகங்களின் வழியாகத் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐஓஎஸ் 13 அறிமுகம் கண்டவுடனேயே டுவிட்டர் தளத்தில் ‘ஐபோன் 6’ தொடர்பிலான பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன – விவாதிக்கப்பட்டன (டிரெண்டிங்).
2014-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6 அதிகாரபூர்வமாக தற்போது ஆப்பிள் விற்பனை மையங்களில் விற்கப்படுவதில்லை. ஆப்பிள் மலேசியாவின் அகப்பக்கத்திலும் அதன் விற்பனைக்கான விவரங்கள் ஏதும் இல்லை.
இருப்பினும் தனியார் விற்பனை மையங்களில் 32ஜிபி கொள்ளிடம் கொண்ட ஐபோன் 6 கைத்தொலைபேசிகள் சுமார் 1,099 ரிங்கிட் விலையில் இன்னும் வாங்குவதற்குக் கிடைக்கின்றன.