சான் ஓசே (அமெரிக்கா) – ஆண்டுதோறும் ஜூன் மாத வாக்கில் உலகம் எங்கும் இருக்கும் தனது தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கு நடத்தும் மாநாட்டில் (WWDC 2019 – World Wide Developers Conference) ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்புகளையும், எதிர்காலத் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அதன்படி இன்று திங்கட்கிழமை ஜூன் 3-ஆம் நாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் தொடங்கும் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் எத்தகைய அறிமுகங்கள் இடம் பெறப் போகின்றன என்பதை அறிய அகில உலகமும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்கின் முதன்மை உரையோடு தொடங்கும் இந்த மாநாட்டில் மற்ற உயர்நிலை அதிகாரிகளும் அறிமுகம் காணவிருக்கும் தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்ப வசதிகளை விரிவாக எடுத்துரைப்பர்.
வெள்ளிக்கிழமை ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முதல் கட்டமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுக அட்டைகளும், மாநாட்டு சின்னங்களும் வழங்கப்பட்டன.
ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் கையடக்கக் கருவிகளுக்கான அடுத்த கட்ட தொழில் நுட்பமான ஐஓஎஸ்13 பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ஐஓஎஸ் 13 புதிய தொழில்நுட்பத்தின் வழி டார்க் மோட் (Dark Mode) எனப்படும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கப் போகிறது. திரையில் ஒளியை உமிழாத கரும் வண்ணங்களில் எழுத்துகளும் படங்களும் இனி தெரியும் என்பதால், இதன் மூலம் ஆப்பிள் கருவிகளின் மின்கல (பேட்டரி) சக்தியின் கால அளவு (battery life) கூடுதலாகும்.
ஆப்பிள் வாட்ச் எனப்படும் ஆப்பிள் கைக்கெடிகாரங்களின் தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் மேக்ஓஎஸ் 10.15 (macOS 10.15) எனப்படும் அடுத்த கட்ட ஆப்பிள் கணினிகளுக்கான மென்பொருள் அறிமுகமாகும் என்றும் ஆப்பிள் டிவியின் மேம்படுத்தப்பட்ட வசதிகளும் விளக்கப்படும் என்றும் மாநாட்டுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் மாநாட்டில் டிம் குக் நடத்தும் முதன்மை உரை மற்றும் மற்ற முக்கிய உரைகள் அனைத்தும் ஆப்பிள் கையடக்கக் கருவிகளின் வழியும், சமூக ஊடகங்களின் இணையத் தளங்களின் வழியும் நேரலையாக ஒளிபரப்பாகும். அதன்பின்னர் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஆப்பிள் அகப்பக்கங்களில் வெளியிடப்படும்.
-செல்லியல் தொகுப்பு