நியூயார்க், பிப்ரவரி 7 – அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் தலைவராக செயல்பட்டு வந்த இந்தியர் அஜய் பங்காவிற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழுவில் முக்கிய பொறுப்பு அளித்து சிறப்பித்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டது பற்றி வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் புனே நகரில் 1960-ம் ஆண்டு பிறந்த அஜய் பங்கா,
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பையும், ஆமதாபாத் இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பட்ட மேற்படிப்பையும் (MBA) முடித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெஸ்லே, பெப்சிகோ உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதன் பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு, அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி நிறுவனமான ‘மாஸ்டர் கார்ட்ஸ்’ (Master Cards)-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
மிகக் குறுகிய காலத்தில், அமெரிக்காவின் வர்த்தக குழுவில் முக்கிய பொறுப்பிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, அமெரிக்க வட்டாரத்தில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அஜய் பங்கா நியமனம் பற்றி ஒபாமா கூறுகையில், “திறமையும், நிபுணத்துவம் வாய்ந்த இந்த பணியாளர்களை நியமனம் செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
இவர்களால் நம் நாட்டிற்கு சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். இவர்களின் சிறந்த பணிகளுக்காக நன்றி கூறுவதுடன், இவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.