Home நாடு மஇகா கிளைகள் – தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்த சட்டப்படி சங்கப்பதிவிலாகா உத்தரவிட முடியாது!

மஇகா கிளைகள் – தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்த சட்டப்படி சங்கப்பதிவிலாகா உத்தரவிட முடியாது!

378
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 7 – மஇகாவில் நிலவி வரும் சிக்கலுக்கு பிரதமர் எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறார் என்பது அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

Najib Malaysiaஎனினும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலையும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தையும் சந்தித்த பின்னர் பிரதமர் முன்வைத்த சமாதான அறிவிப்பு மஇகாவில் எதிர்பார்க்கப்படி அடிமட்டத் தொண்டர்கள் – தலைவர்களுக்கிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கவில்லை.

தற்போது நிலவி வரும் பூசலை கட்சிக்குள் வைத்து தலைவர்களுக்கிடையே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளாமல், 68 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்சியின் எதிர்காலத்தை தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை சங்கப்பதிவிலாகாவிடம் ஒப்படைத்திருக்கும் பழனிவேலின் தலைமைத்துவ இயலாமையைக் கண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட பலர் வருத்தமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

உட்கட்சிப் பூசலால் மஇகாவின் மதிப்பும், அதன் உறுப்பினர்களின் மன உறுதியும் ஒழுங்குணர்வும் குலைந்துள்ள நிலையில், பிரதமரின் அறிவிப்பானது ஏற்கெனவே கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடைபெறும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கிளைகளுக்கும் தொகுதிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்படுமா? என அதில் குறிப்பிடப்படவில்லை. பிரதமருடனான சந்திப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் பழனிவேலும், சுப்ரமணியமும் இன்னும் மௌனம் காத்து வருகின்றார்கள்.

சங்கப் பதிவிலாகா தனது முடிவுகள் குறித்து கடிதம் அளித்த பிறகே அனைத்தும் தெளிவாகும் என்பதால் சங்கப் பதிவிலாகாவின் அடுத்த கட்ட கடிதத்தை எதிர்பார்த்து மஇகாவினர் தற்போது காத்துக் கிடக்கின்றனர்.

அதேசமயம் சங்கப்பதிவிலாகாவின் பரிந்துரைகளை மஇகாவின் அனைத்துப் பிரிவினரும் ஒருமனதாகப் பின்பற்றுவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை.

இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 9ஆம் தேதி மஇகா-சங்கப் பதிவிலாகா விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பிற்பகல் 1.30 மணியளவில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹாமிடி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளை மற்றும் தொகுதித் தலைவர்களை சந்திக்கும் மஇகா தலைவர்கள்:

MICஇன்று சனிக்கிழமை வரை தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்வு தொடர்பான பணிகளில் மூழ்கியுள்ள கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம், திங்கட்கிழமை முதல் கிளைகள் மற்றும் தொகுதிகளின் தலைவர்களைச் சந்திக்க தீவிரமாக களமிறங்கவிருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், பழனிவேல் ஏற்கெனவே கிளைகள் மற்றும் தொகுதித் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, பிரதமரைச் சந்திக்கும் முன்னரே அவர் ஜோகூர் கிளைத் தலைவர்களைச் சந்தித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பழனிவேல் பினாங்கு தொகுதி தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

KL16_180308_SUBRAMANIAMஇத்தகைய சூழ்நிலையில் அனைத்து கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கும் மறுதேர்தல் நடைபெறுமா? என்பதே அத்தலைவர்கள் மத்தியில் தற்போது சுழன்று கொண்டிருக்கும் பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.

பினாங்கு தொகுதித் தலைவர்களுடனான சந்திப்பின்போது, அனைத்து கிளைகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்படும் என்றும், அதையடுத்து தொகுதிகளுக்கும், பின்னர் தேசிய அளவிலும் மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் பழனிவேல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மறுதேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தேசிய அளவிலான தேர்தலை முறையாக நடத்தத் தெரியாத கட்சித் தலைமையின் முறை தவறிய செயல்பாட்டால், மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திப்பதில் பெரும்பாலான கிளைகள் மற்றும் தொகுதிகளின் தலைவர்களுக்கு விருப்பமில்லை. இதனால்தான் அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

“மேல்மட்ட அளவில் உள்ள சிலரது தவறுகளுக்காக கிளைகள் மற்றும் தொகுதித் தலைவர்கள் ஏன் பலிகடா ஆக்கப்பட வேண்டும்?” என டாக்டர் சுப்ரமணியம் எழுப்பியுள்ள கேள்வி, கிளை மற்றும் தொகுதித் தலைவர்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்த வாய்ப்புண்டா?:

மஇகா சட்டவிதிகளின்படி தேசிய அளவிலான பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வழியுண்டு என்றும், கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கு எதிர்வரும் 2016 வரை மறுதேர்தல் நடத்த வழியில்லை என்றும் மஇகா சட்டவிதிகளை நன்கறிந்த சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

G.Palanivel“மஇகாவின் தேர்வு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், தேர்தல் தேதியில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த தேர்தல் வரை பதவி வகிப்பர்” என மஇகா அரசியல் சாசனத்தின் 92ஆவது பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டுதான் சட்டப்படி தேர்தலை நடத்த முடியும்.

மஇகாவின் அரசியல் சாசனத்திற்கு எதிராக – அல்லது அந்த அரசியல் சாசனத்தில் இல்லாத ஓர் அம்சத்தை நிறைவேற்ற – சங்கங்களின் பதிவிலாகாவாலும் கூட – ஏன் பிரதமரால் கூட – எந்த முடிவும் எடுக்க முடியாது.

கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் 2013இல் நடைபெற்ற அந்தத் தேர்தல் செல்லாது என சங்கப்பதிவிலாகாவோ அல்லது மஇகா மத்திய செயலவையோ அறிவிக்க வேண்டும்.

அதேசமயம் சட்டப்பூர்வமான காரணங்கள் இன்றி 2013இல் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றோ அதன் முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவோ சங்கப்பதிவிலாகாவும், மஇகா மத்திய செயலவையும் அறிவிக்க முடியாது என்பதும் கவனிக்கத்தக்க அம்சம்.

மாறாக, அவசரப் பொதுப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கு 2016இல் நடைபெற வேண்டிய தேர்தலை இந்தாண்டே நடத்தலாமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்.

இந்நிலையில் அவ்வாறு கூட்டப்படும் அவசர அல்லது சிறப்புப் பொதுப் பேரவையில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஏனெனில் பொதுப்பேரவை அல்லது சிறப்புப் பொதுப் பேரவை மூலம் கட்சியின் அரசியல் சாசனத்தில் மாற்றங்களைச் செய்ய மஇகாவின் அரசியல் சாசனப்படி அனுமதி இல்லை.

அரசியல் சாசனத்தில் செய்யப்படும் எந்தவொரு மாற்றத்தையும் முதலில் மத்திய செயலவை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே பொதுப் பேரவையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அம்மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மஇகா அரசியல் சாசனம் தெரிவிக்கிறது.

எந்த மத்திய செயலவை தற்போது செல்லுபடியாகும்?:

MIC Constitution edited photoஇத்தகைய சந்தேகங்கள் அனைத்தும் மற்றொரு மிக முக்கியமான கேள்வியை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

அது – எந்த மத்திய செயலவை தற்போது செல்லுபடியாகும்? என்பதுதான்!

2009இல் தேர்வு செய்யப்பட்ட மத்திய செயலவையா அல்லது 2013இல் தேர்வு செய்யப்பட்ட மத்திய செயலவையா? என்பதுதான் தற்போது மஇகாவினர் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேள்வி.

இந்நிலையில் 2013ல் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் 2009இல் தேர்வான மத்திய செயலவையை அங்கீகரிப்பது என்றும் பிரதமருடனான சந்திப்பின்போது மஇகா தலைவரும், துணைத் தலைவரும் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009இல் தேர்வான மத்திய செயலவையே கட்சி விவகாரங்களைக் கவனிக்கும் என்கிற ஏற்பாட்டையும் இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவலும் கட்சியில் கசிந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் சங்கப்பதிவிலாகாவில் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் கடிதத்தில் கீழ்க் காணும்  கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? தங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்குமா? என்பதே மஇகாவின் அடிமட்டத் தொண்டர்களின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

1. கட்சியின் நடப்பு தலைமைச் செயலாளர் யார்? கடந்த 2009 மத்திய செயலவையின்படி சக்திவேலா அல்லது புதிதாக நியமிக்கப்பட்ட குமார் அம்மானா?

2. தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி மஇகா தேசியத் தலைவரால் அண்மையில் நியமிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களின் கதி என்ன?

3. இதைத் தொடர்ந்து புதிய மாநிலத் தலைவர்களை நியமித்து தேசியத் தலைவர் மேற்கொண்ட நடவடிக்கை என்னவாகும்? (உதாரணம்: கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டது செல்லாது என எழுந்துள்ள எதிர்ப்பு.)

4. அப்படியே கிளைகளுக்கு மறு தேர்தல் நடந்தால் எந்த ஆண்டின் இறுதிவரை உள்ள அதிகாரபூர்வ கிளைப் பட்டியல் ஏற்றுக் கொள்ளப்படும்? 2009ஆம் ஆண்டின் இறுதி வரை இருந்த பட்டியலா?அல்லது டிசம்பர் 2014 வரை உள்ள பட்டியலா?

5. சட்டத்திற்குப் புறம்பான கிளைகள் குறித்த நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக சங்கப் பதிவிலாகாவில் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பொருளாளர் ரமணன் அளித்துள்ள புகாரின் கதி என்ன?

சங்கப்பதிவிலாகாவின் கடிதத்திற்காகக் காத்திருக்கும் இவ்வேளையில் மஇகா தலைவர்கள் பலரது மனங்களை இத்தகைய பல கேள்விகள் ஆக்கிரமித்துள்ளன. அலைக்கழித்து வருகின்றன.

இந்நிலையில் சங்கப்பதிவிலாகாவின் கடிதம் கிடைக்கப் பெறும்போது, மஇகாவில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கான விடைகளுக்குப் பதிலாக அந்தக் கடிதம் இருக்கும் என்பதை விட,

மேலும் புதிய குழப்பத்தையும், கேள்விகளையும், ஐயப்பாடுகளையும், சில சட்ட சிக்கல்களையும் அந்த சங்கப் பதிவிலாகா கடிதம் உருவாக்கும் என்றே தோன்றுகின்றது.

-இரா.முத்தரசன்