கோலாலம்பூர், பிப்ரவரி 9 – கடந்த 2005-ம் ஆண்டு கூகுள் அறிமுகப்படுத்திய தொலைத்தொடர்பு சேவை தான் ‘கூகுள் டாக்’ (Google Talk). குறுந்தகவல் மட்டுமல்லாமல் குரல் அழைப்புகளையும் உலகம் முழுவது ஏற்படுத்த முடிந்ததால், ஆரம்ப காலங்களில் கூகுள் டாக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
எனினும், அதன் பிறகான தொழில்நுட்ப மாற்றங்களும், புதிய சேவைகளும் இதனை அதர பழசாக்கியது. இந்நிலையில் கூகுள் டாக் சேவையினை எதிர்வரும் 16-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கூகுள் டாக் பயன்படுத்தும் பயனர்கள், புதிய சேவையான ‘கூகுள் ஹேங்அவுட்’ (Google Hangouts)-ற்கு மாறிக் கொள்ளுங்கள்.
மாறவில்லை என்றால், 16-ம் தேதி முதல், கூகுள் டாக் சேவைக்கு பதிலாக கூகுள் ஹேங்அவுட் சேவை தன்னிச்சையாக மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஹேங்அவுட் சேவையை புகுத்துவதற்கான முக்கிய காரணம் ‘வாட்ஸ் அப்’ (Whats App)-ன் புதிய அறிவிப்புகள் தான். இதுவரை திறன்பேசிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ் அப், கடந்த வாரம் முதல் கணினியிலும் செயல்படத் தொடங்கி உள்ளது.
திறன்பேசிகள் போன்று பல்வேறு வசதிகள் புதிய வாட்ஸ் அப் சேவையில் மேம்படுத்தப்படாத போதும், விரைவில் அவை மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சிலர் ஹேங்அவுட் சேவைக்கு மாறி வந்தாலும், பலர் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக இந்திய பயனர்கள் தரப்பில் கூகுள் டாக் சேவையை நீட்டிக்கும் படி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஹேங்அவுட் சேவையின் பதிவிறக்கம் நீண்ட நேரம் பிடிக்கக் கூடிய ஒன்று.
மேலும், அவை குறைந்த இணைய வேகத்தில் சரிவர வேலை செய்யாது. அதன் காரணமாகவே இந்த மாற்றத்தை ஏற்க பலர் மறுக்கின்றனர்.
ஒருவேளை ஜி-டாக், நிறுத்தம் உறுதிபடுத்தப்பட்டால், பெரும்பாலான இந்தியப் பயனர்கள் ஸ்கைப் போன்ற வேறு சேவைகளுக்கு மாற வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.