நியூயார்க், பிப்ரவரி 9 – ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
பல்வேறு நாடுகளின் பிணைக் கைதிகளை ஈவு இரக்கமின்றி கொல்வது, ஆயுத பேரம், தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற செயல்களால், உலக நாடுகளின் கவனம் ஈர்த்துள்ள ஐஎஸ்ஐஎஸ் உலகை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஈராக் மற்றும் சிரியாவில் எண்ணெய் வளம் கொண்ட பல நகரங்களை அந்த தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால், உலக சந்தைகளுக்கு எண்ணெய் விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமாக வருமானம் வருகிறது.இதை தடுப்பதற்காக ஐநா சபை முக்கியத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில் ஐநா-வில் அங்கம் வகிக்கும் நாடுகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என அறிவிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த தீர்மானம் பற்றிய விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவாதங்களின் முடிவில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வாக்கெடுப்புகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் வெற்றி அடையும் பட்சத்தில் தீவிரவாதிகள் விற்பனை செய்யும் பெட்ரோலிய பொருட்களை பெரும்பாலான நாடுகள் வாங்காது. இதனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிளின் பணப் புழக்கம் பெரும்பாலும் தடைபட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.