புதுடெல்லி, பிப்ரவரி 9 – இந்தியாவின் மிக முக்கிய விமான நிறுவனங்களுள் ஒன்றான ஏர் இந்தியாவிடம் விமானங்களை குத்தகை விட பல்வேறு நாடுகளின் குத்தகையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏர் இந்தியா நிறுவனம் எதிர்வரும் 2018-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள், 19 ஏர் பஸ் 320 நியோ விமானங்களை 12 வருட குத்தகைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது.
இந்த 19 விமானங்களில் 5 விமானங்களை ஒரு சீன நிறுவனத்திடம் பெறுவதற்கு ஏர் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஏனைய 14 விமானங்களை குத்தகை எடுப்பதற்கு ஏர் இந்தியா பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இதுவரை 14 நிறுவனங்கள் எங்களைத் தொடர்பு கொண்டு குத்தகை தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளன”.
“அந்நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை. அந்நிறுவனங்கள் சுமார் 48 விமானங்கள் வரை குத்தகை தர சம்மதம் தெரிவித்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, குத்தகை நிறுவனங்களுடன் Dry Leasing அடிப்படையில் தான் விமான நிறுவனங்களை குத்தகை எடுக்க தீர்மானித்துள்ளது.
இதன் படி குத்தகை காலங்களில் விமானங்களின் காப்பீடு, குழு பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் அந்தந்த விமான நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதாகும்.
இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், குத்தகையாளர்கள் தங்கள் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்திடம் குத்தகையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே அதிக இலாபத்துடன் இயங்கி வருகின்றது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஏர் இந்தியா, புதிய விமானங்களை அதிக அளவில் குத்தகைக்கு எடுத்து வாடிக்கையாளர்களைக் கவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.