பிப்ரவரி 10 – கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பொறுபேற்றார். இந்திய-அமெரிக்கரான நாதெல்லாவின் இந்த ஒரு வருடப் பயணம், அந்நிறுவனத்தில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என வல்லுனர்கள் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்திய-அமெரிக்கர்கள் பலர் பணி செய்து வந்தாலும், தலைமை நிர்வாக அதிகாரியாக ஒருவர் பதவி ஏற்பது, இதுவே முதல் முறை. அதன் காரணமாக நாதெல்லாவிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு அவர் நிறுவனத்தை நடத்திய விதம், அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
எதிர்காலம் தொழில்நுட்பத்தின் தளம் திறன்பேசிகள் தான் என்பதை நன்கு உணர்ந்துள்ள நாதெல்லா, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் தங்கள் நிறுவனத்திற்கான மிகச் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி உள்ளார்.
கணினிகளில் மட்டுமே இருந்து வந்த ஆபீஸ் மென்பொருளை, ஐபேட்களில் கொண்டு வந்ததும், பின்னர் வேர்ட், எக்ஸல், பவர் பாயின்ட் பயன்பாடுகளை அண்டிரொய்டு பயனர்களுக்கு இலவசமாக அறிவித்ததும் அவரின் வர்த்தகக் கூர்மையை காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தொழில்நுட்ப விமர்சகர் ஜெ.பி.கௌண்டர் கூறுகையில், “நாதெல்லா, மைக்ரோசாப்ட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை. ஆனால், நிறுவனத்தை, மிகச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறார்”என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “மறுசீரமைப்பு நடவடிக்கையாக 18000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது, அந்நிறுவனத்திற்கு சாதகமான பலனையே கொடுத்தது. அதே சமயம் பெண் ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் நாதெல்லாவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது” என்றும் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் 10-ன் அறிமுகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் விண்டோஸ் 8 ஏற்படுத்திய தாக்கத்தை குறைத்துள்ளது. திறன்பேசிகளுக்கும், கணினிகளுக்கும் விண்டோஸ் 10-ன் ஒரே பயனர் இடைமுகம் என்ற அறிவிப்பு, திறன்பேசிகள் தளத்தில் நாதெல்லா காட்டும் ஈடுபாட்டைக் குறிக்கிறது.
பயனர்களின் எதிர்பார்ப்புகளை விண்டோஸ் 10 நிறைவேற்றினால், 2015 மைக்ரோசாப்ட்டிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.