சிங்கப்பூர், பிப்ரவரி 11 – சிங்கப்பூரிலுள்ள பிரபல நான்யாங் தொழில்நுட்பக் கல்லூரியின் (Nanyang Polytechnic) முன்னாள் மாணவர்களின் தரவுத்தளம் (Database) மர்ம நபர்களால் முடக்கப்பட்டதோடு, வங்கிக் கணக்குகளும் திருடப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, 1994-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரையில் படித்த 240 மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் தரவுத்தளத்தின் பாதுகாப்பு நிரல்களில் இருந்த ஓட்டைகள் மூலமாக, சில மர்மநபர்கள் கணக்குகளை களவாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவர்களின் சேர்க்கை எண்கள், பெயர்கள் ஆகியவற்றுடன் அவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்திய வங்கிக் கணக்குகள் ஆகிய விவரங்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், காவல்துறையினர் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திவருவதோடு, தங்களின் மற்ற தரவுத்தளங்களின் பாதுகாப்பு அம்சங்களையும் மறுஆய்வு செய்து வருகின்றது.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களுக்கு தங்களின் வருத்தத்தையும் கோரியுள்ளது.