கோலாலம்பூர், பிப்ரவரி 11 – சங்கப் பதிவகமும் உள்துறை அமைச்சரும் செய்துள்ள முடிவுகளின் அறிவிப்பு வெளியானது முதல் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் – உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் இணைந்த அணியில், பல காரணங்களால், உற்சாகமும், வெற்றிக் களிப்பும் கரைபுரண்டோடுவது நன்கு தெரிகின்றது.
அதற்கான காரணங்களுக்கான பட்டியலில் முதலிடம் பெறுவது – இனி 2009 மத்திய செயலவைதான் அதிகாரபூர்வமாக இடைக்கால செயலவையாக செயல்படும் என்ற அறிவிப்புதான்!
காரணம், அந்த மத்திய செயலவையில் இருக்கும் பெரும்பான்மை உறுப்பினர்கள் சுப்ரா-சரவணன் பக்கம் என்பதோடு, கடந்த காலங்களில் அந்த மத்திய செயலவையில் பழனிவேலுவுக்கு ஆதரவாக இருந்த என்.ரவிச்சந்திரன், சக்திவேல், ஜஸ்பால் சிங், கே.ஆர்.பார்த்திபன், எஸ்.எஸ்.ராஜகோபால் போன்றவர்கள் இப்போது சுப்ரா-சரவணன் அணியின் பக்கம் வலுவுடன் நிற்கின்றார்கள்.
கட்சியின் தேசியத் தலைவர் செய்த சில விபரீத முடிவுகளினால் – அவருக்கு வழங்கப்பட்ட சில தவறான சட்ட ஆலோசனைகளால், அவரே எதிர்பாராத வண்ணம், தேசியத் தலைவர் தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது. அவரே தேர்தலை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
இதனால், பழனிவேலுவை நிர்ப்பந்தப்படுத்தியோ, வற்புறுத்தியோ தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகவைக்க வேண்டிய கட்டாயம் இனி சுப்ரா -சரவணன் அணியினருக்கு இல்லை.
90 தொகுதி தலைவர்களின் ஆதரவு இன்னொரு பலம்
ஏற்கனவே, ஏறத்தாழ 90 தொகுதித் தலைவர்களின் பகிரங்க ஆதரவையும் பெற்றாகிவிட்டது. கிளைகள் என்று வரும்போதும் கணிசமான கிளைகளின் ஆதரவை சுப்ரா-சரவணன் அணியினர் ஏற்கனவே பெற்றுள்ளனர்.
2012 வரையில் உள்ள கிளைகள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது சுப்ரா-சரவணன் அணியினரின் உற்சாகத்திற்கு மற்றொரு காரணம்.
2012க்குப் பிறகு சட்டவிரோதக் கிளைகள் அமைக்கப்பட்டதாக எஸ்.ஏ.விக்னேஸ்வரன், ஆர்.ரமணன் சமர்ப்பித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த முடிவு சங்கப் பதிவகத்தால் செய்யப்பட்டது.
அதன்படி 2012க்குப் பிறகு அமைக்கப்பட்ட பெரும்பாலான கிளைகள், பழனிவேலுவுக்கு ஆதரவான தொகுதி தலைவர்களின் தொகுதிகளில் அமைக்கப்பட்டன என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கிளைகள் இனி தேர்தலில் பங்கேற்க முடியாது என்பதால், பழனிவேலுவுக்கு கிடைக்கக்கூடிய கணிசமான வாக்குகளும் குறைந்து விடும்.
இந்தப் போராட்டத்தில் எல்லாவற்றையும் விட சுப்ரா-சரவணன் அணியினர் மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடுவது கிளைகள் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் முடிந்தவுடனேயே, மே மாதத்தில் தேசியத் தலைவர் தேர்தல் நடத்தப்படுவதுதான்! அதற்குப் பின்னர்தான் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது.
மஇகா அரசியலை நன்கு உணர்ந்தவர்களுக்கு ஒன்று தெரியும்.
அதாவது தொகுதி தலைவர்கள் என்று வந்தால், அவர்கள்தான் கிளைகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்படிதான் கிளைத் தலைவர்கள் நடந்து கொள்வார்கள் – வாக்களிப்பார்கள்.
அதே சமயத்தில் எல்லா தொகுதி தலைவர்களும் நடப்பு தேசியத் தலைவருக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். காரணம், அவர்கள் தொகுதித் தலைவர்களாக நீடிப்பதும், தொகுதியில் தேர்தல் வந்தால் வெற்றி பெறுவது என்பதும் தேசியத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்தது.
ஆனால், இந்த முறை கிளைத் தேர்தல்கள் முடிந்ததும், தேசியத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் கிளைத் தலைவர்கள் சுதந்திரமாக, யாருடைய நிர்ப்பந்தமும் இன்றி, குறிப்பாக தொகுதித் தலைவர்களின் நெருக்குதல் இன்றி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சி தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி
ஏற்கனவே, கட்சியில் நிகழ்ந்து வரும் குழப்படிகளுக்கு பழனிவேலுவின் தலைமைத்துவம்தான் காரணம் என்ற எண்ணம் கிளைத் தலைவர்களிடையே தற்போது ஆழமாகப் பதிந்து விட்டது.
இன்றைக்கு உட்கட்சிப் பிரச்சனைகளை சக குடும்பத்தினர்போல் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளாமல், கட்சியின் தலைவிதியை சங்கப் பதிவகத்திடமும், உள்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் கொண்டு சென்று சேர்த்தது பழனிவேலுவின் ஒருதலைப் பட்சமான போக்குதான் என்ற குறைபாடும் கிளைத் தலைவர்களிடையே வேரூன்றி விட்டது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
எனவே, தேசியத் தலைவர் தேர்தல் என்று வரும்போது எந்த தொகுதித் தலைவரும் நடப்பு தேசியத் தலைவரான பழனிவேலுவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க தயங்கப் போகின்றனர்.
காரணம், யார் தலைவராக வெல்லப் போகின்றார் என்பது தெரியாத பட்சத்தில் அவர்கள் பகிரங்கமாக கிளைத் தலைவர்களை இவருக்கு வாக்களியுங்கள் என்று நெருக்கப் போவதில்லை.
காரணம், தொடர்ந்து வரும் தொகுதி தேர்தலில் மீண்டும் வென்று வருவதற்கு கிளைத் தலைவர்களின் ஆதரவு அவர்களுக்கு மீண்டும் தேவைப்படும்.
அதைவிட முக்கியமாக, 90 தொகுதிகளின் ஆதரவை பெற்றுவிட்ட சுப்ரா அணியினர்தான் தலைவர் தேர்தலில் வெல்வார்கள் என்ற நினைப்பும், சிந்தனையும், எதிர்பார்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி வட்டாரங்களில் பரவி வருகின்றது.
தேசியத் தலைவரை வேலை செய்யவிடாமல் தடுத்தனரா?
தேசியத் தலைவரை வேலை செய்யவிடாமல் சுப்ரா-சரவணன் அணியினர் தடுத்தனர் என்ற ஒரு குற்றச்சாட்டும் கிளைத் தலைவர்களிடையே அவ்வளவாக எடுபடவில்லை.
காரணம், தூங்குபவனைத்தானே எழுப்ப முடியும்? தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?
அதே போல, வேலை செய்யும் தேசியத் தலைவரைத் தானே தடுத்து நிறுத்த முடியும்? இடையூறு செய்ய முடியும்?
தலைமைப் பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளாகவே, சமூக ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை முன்வைக்காத, பழனிவேலுவின் தலைமைத்துவத்தை வேலை செய்ய விடாமல் தடுத்தனர் என்ற கூப்பாடும், கூக்குரலும், கிளைத் தலைவர்களை கவரவும் இல்லை. சென்றடையவும் இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தமான சூழ்நிலை என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சரவணன் அடுத்த அமைச்சரா?
மே மாதம் தேசியத் தலைவர் தேர்தலை நோக்கி மிகுந்த உற்சாகத்துடன் பிரச்சாரக் களத்தில் சரவணன் அணி இப்போதே களமிறங்கி விட்டது என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஇகா கூட்டரசுப் பிரதேசத்திலும், நாடு தழுவிய அளவிலும் கணிசமான கிளைத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ள சரவணன், இந்த தேசியத் தலைவர் தேர்தல் மூலம் தனது அரசியல் வாழ்வில் முக்கியமானதொரு காலகட்டத்திற்கு வந்துள்ளார்.
டாக்டர் சுப்ராவை ஆதரிக்கும் அவரது குழுவினரின் தீவிர செயல்பாடுகள் சுப்ராவுக்கு வெற்றியைத் தேடித் தரும் முக்கிய காரணியாக விளங்கும் என்பதோடு,
தேர்தலில் வெற்றி பெற்று, சுப்ரா தேசியத் தலைவரான பிறகே தொகுதித் தலைவர்கள் தேர்தல் நடைபெறும் என்பதால், அந்தத் தொகுதிகளில் தேசிய நிலையிலான பேராளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சரவணன் முக்கிய பங்கை ஆற்றுவார்.
மே மாதம் சுப்ரா தேசியத் தலைவராக தேர்வு பெற்றுவிட்டால், அதன்பிறகு தொகுதிகளுக்கான தேர்தல் புதிய தலைவர் சுப்ராவின் நேரடிப் பார்வையின் கீழ், ஆளுமையின் கீழ்தான் நடைபெறும் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் சரவணன் அணியினரின் கைதான் அங்கேயும் – அப்போதும் ஓங்கியிருக்கப்போகின்றது என்பது அவரது ஆதரவாளர்களின் கணிப்பு.
அதனால்தான் அவர்கள் சுப்ராவுக்காக தீவிர பிரச்சாரத்தில் இப்போதே இறங்கிவிட்டனர்.
நானும் தேசியத் தலைவருக்குப் போட்டியிடுவேன் என சரவணன் அறிவித்திருப்பது, சில அரசியல் வியூகங்களுக்காக, முன்கூட்டியே விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பது சுப்ரா-சரவணன் அணியினருக்கு நன்கு தெரியும். அதனால், கட்சியில் யாரும் அந்த அறிவிப்பைப் பொருட்படுத்தவில்லை.
எனவே, ஜூன் மாதம் சுப்ரா தலைமையில் நடைபெறப் போகும் தொகுதித் தேர்தல்களின் மூலம் வெற்றிபெறும் பேராளர்கள் ஆதரவு – அப்போது தேசியத் தலைவராக இருக்கப்போகும் சுப்ராவின் ஆதரவு – தனது சொந்த ஆதரவு – இப்படி இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஜூலை மாதம் நடைபெறும் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் சரவணன் சுலபமாக வென்று விடுவார் என்பதாலும் அவரது அணியில் உற்சாகம் கரைபுரண்டோடுகின்றது.
மே மாதம் தேசியத் தலைவர் தேர்தலில் பழனிவேல் தோற்றுவிட்டால், அநேகமாக அவர் அமைச்சராக நீடிக்க மாட்டார் – அடுத்த இரண்டாவது மஇகா அமைச்சராக சரவணனைத்தான் சுப்ரா நியமிப்பார் – என்பதாலும் சரவணன் ஆதரவாளர்களிடையே தேசியத் தலைவர் தேர்தலில் வெற்றிவாகை சூடியே தீர வேண்டும் என்ற வேட்கையும், வேகமும் பீறிட்டுக் கிளம்பியுள்ளது.
எனவே, சுப்ரா-சரவணன் அணியினரின் மத்தியில் சங்கப் பதிவகத்தின் முடிவால் உற்சாகமும், உவகையும், வெற்றிக் களிப்பும், ஒன்று திரண்டு மையமிட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிவதாக மஇகாவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-இரா.முத்தரசன்