ரோம், பிப்ரவரி 13 – வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது வாடிக்கையாகி வருகின்றது.
கடல் சீற்றத்திலிருந்து தப்பித்த எஞ்சிய அகதிகளை படகுகளில் இருந்து மீட்கும் இத்தாலியக் கடற்படையினர்
அவ்வாறு லிபியாவில் இருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பா நோக்கி பயணம் மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால், 300-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி, வந்த அவர்களின் படகுகள் இத்தாலியின் லாம்பெடுசா தீவு அருகே மத்திய தரைக்கடல் பகுதிக்கு வந்தபோது, தட்பவெப்ப நிலை மோசம் அடைந்தது. கடல் சீற்றம் அதிகமாகி, அகதிகள் வந்த படகுகள் தத்தளித்துள்ளன.
தகவல் அறிந்து விரைந்து வந்த இத்தாலி கடலோர பாதுகாப்பு படையினர் 4 படகுகளில் இரண்டை மீட்டனர். எனினும், மற்ற இரண்டு படகுகள் என்னவானது என்று தெரியவில்லை.
இது குறித்து இத்தாலி கடலோர பாதுகாப்பு படையினர் கூறுகையில், “காணாமல் போன படகுகளை தொடர்ந்து தேடி வருகின்றோம். இதுவரை அந்த படகுகள் பற்றி எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லை. ஒருவேளை அந்த படகுகள் கடலில் மூழ்கி இருந்தால், அதில் பயணம் மேற்கொண்ட 300 பேரும் இறந்திருக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளனர்.
ஐ.நா. மனித வளத்துறையும் இத்தகவலை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 300 பேர் இதுபோல் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
படகு விபத்தில் பலியான அகதி ஒருவரின் சடலம் வாகனத்தில் ஏற்றப்படுகின்றது
படங்கள்: EPA