சென்னை, பிப்ரவரி 13 – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக் ஆசிஷ் வித்யார்த்தி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் ‘அனேகன்’. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை தள்ளுபடி செய்தது. மனுவில், படத்தில் சலவைத் தொழிலாளர் பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் உள்ளன.
இப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை திரைப்படத் தணிக்கை வாரியம் நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதுதொடர்பாக மும்பையில் உள்ள தணிக்கை வாரியத்துக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால் பதில் இல்லை. எனவே வண்ணார் சமூகப் பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளையும், வசனங்களையும் நீக்க திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் இன்று பிப்ரவரி 13-ஆம் தேதி ‘அனேகன்’ திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும். மனுவை விசாரித்த நீதிபதி, இம்மனு பொதுநல மனுவாக விசாரிக்க உகந்தது அல்ல.
மனுதாரர் தணிக்கை வாரியத்தை அணுகிப் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.