கோலாலம்பூர், பிப்ரவரி 14 – ‘ராஜா போமோ’ டத்தோ இப்ராகிம் மட் ஸின் என்பவரை நினைவிருக்கிறதா? மாயமான எம்எச்370 விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடந்த ஆண்டு கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கே சென்று பல சடங்குகளையெல்லாம் நடத்தி ஒரே நாளில் ஒட்டுமொத்த மலேசியர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனை, “முதலை மாதிரி வேகமாக அறைவேன் பார்க்குறீயா” என்று வெளிப்படையாகவே வம்புக்கு இழுத்தவர்.
இவரின் அண்மைய சாகசம் தற்போது யூடியூப், பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் நலனுக்காக சிறை வாசலுக்கே சென்று வழக்கம் போல மூங்கில் தொலைநோக்கியும், இளநீரையும் கொண்டு சடங்குகளை நடத்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
போனால் போகட்டும் மக்களும் தங்களது கவலைகளை மறந்து சிரிக்கட்டுமே என்று நினைத்து உள்துறை அமைச்சும் அவரது சடங்களுக்கு அனுமதியளித்திருப்பதிருக்கின்றது.
இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துங்கு ஜாபர், “அவர் ஒரு கோமாளி. நானே தனிப்பட்ட முறையில் அங்கு சென்று சடங்குகளை காணொளியாகப் பதிவு செய்து குடும்பத்துடன் சிரித்துவிட்டு வர விரும்புகின்றேன்” என்று ராயா போஸ்ட் இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.
சுக்கான் ஸ்டார் தொலைகாட்சியின் பேஸ்புக் பக்கத்தில், “Calon Maharaja Lewak Mega 2015 (Emperor of Mega Joke 2015 Candidate)” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்தக் காணொளியை இதுவரை 269,082 பேர் பார்வையிட்டுள்ளனர். 11,851 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 5,478 பேர் பகிர்ந்துள்ளனர்.
“அன்பு கடவுளே, அன்வாரை காப்பாற்றுங்கள் மற்றும் அவருக்கு துன்பம் விளைவிக்கும் நோக்கோடு இருக்கும் மக்களிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள்” என்று அந்த காணொளியில் போமோ பிரார்த்தனை செய்கின்றார்.
மேலும், சில மனிதர்கள் அவர் மீது நான்கு தீய சக்திகளை ஏவி விட்டுள்ளனர். அவை நான்கையும் நான்கு எலும்பிச்சை பழங்களைக் கொண்டு கொன்றுவிட்டேன் என்றும் போமோ கூறியுள்ளார்.