கோலாலம்பூர் பிப்ரவரி 14 – (மஇகாவில் எழுந்துள்ள தலைமைத்துவப் போராட்டம் குறித்து, மூத்த அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
“ம இ கா தேசியத்தலைவர் தேர்தலில் இறுதி நேரத்தில் நடப்புத்தலைவரான டத்தோஸ்ரீ பழனிவேல் போட்டிடமாட்டார் என்று ம இ கா வட்டாரம் ஒன்று திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது அப்படியே அவர் போட்டியிட்டாலும் அவர் படுதோல்வி அடைவது திண்ணம் என்று’ அந்த ம இ கா. வட்டாரம் உறுதிப்படுத்துகிறது.
2013ல்அவரை எதிர்த்து நடப்புத் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடுவதற்கான சூழ்நிலையிருந்தது . அதை பிரதமர் மூலம் தலையிட வைத்து ; அப்போட்டியை தவிர்த்தார் பழனி!
ஆனால். தற்போது 2013வது ஆண்டில் உள்ள சூழ்நிலையில்லை! தற்போது கட்சியில் பெரும் பிளவும் ஏற்பட்டுள்ளது. கட்சியும் பழனியின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை.
அதேவேளை, 2013ல்அவர் தலைமையேற்று நடத்திய தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும் நடைபெற்றதாக எழுந்த புகாரையொட்டி. ;அத்தேர்தல் செல்லுப்படியாகாது என்று சங்கங்களின் பதிவு இலாகா அறிவித்துள்ளது.
அதனால் பழனி தனது நிலைப்பாட்டில் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளார்.
800 சட்டவிரோதக் கிளைகள்
அதேவேளை தனது வெற்றிக்காக 2012இல் 800க்கும் மேற்பட்ட ம இ. கா கிளைகளை பதிவு செயதுள்ளார். தேர்தல் காலங்களில் புதிய கிளைகள் அமைக்கக்கூடாது என்கிற சட்டவிதியிருக்கும் போது, பழனி அதை மீறி புதிய கிளைகள்.அமைத்தது ஒரு சட்ட மீறலாகும்.
அவர் அதோடு மட்டும் நின்று விடாமல் அக்கிளைகளுக்குரிய உறுப்பினர் சந்தா பணம் கட்சி தலைமையகத்திலிருந்து கட்டப்பட்டுள்ளது என்ற புகாரும் இந்தத் தொகை நான்கு லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது சட்ட அடிப்படையில் ஒரு குற்றமாகும்.இது குறித்து போலீஸ் புகார் செய்யப்படுமானால், கிரிமினல் அடிப்படையில், வழக்கை எதிர் நோக்க வேண்டி வரும்.
இப்படிப்பட்ட சட்ட சிக்கல்களுக்கிடையில், தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது அவசியமா? என்று அவரை யோசிக்க வைத்துள்ளது.
அதோடு தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவாகப் பதிவாகும் என்று எதிர் பார்க்கப்பட்ட 800 கிளைகளின் ஆதரவு முற்றாக கிடைக்காமல் போகும் என்பது உறுதியாகி விட்டது. அதனால் அவரின் தோல்வி உறுதி! என்பதை அவர் கணக்கு போட்டு பார்க்கும் போது அது அவரை மிரட்டவே செய்துள்ளது
3800 ம இ கா கிளைகளில் 800 கிளைகள் சங்கப் பதிவகத்தால் அனுமதிக்கப்படாமல் அடிபட்டுப் போவது உறுதியானால் எஞ்சியிருப்பது 3000 கிளைகள்தான்.அதிலும் பதிவு இலாகாவில் மறுமதிப்பீட்டுக்குப் பிறகு 200 கிளைகள் ஒதுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று தெரிகிறது.
இதனால் தலைவர் தேர்தலில் 2800 கிளைகள் மட்டுமே வாக்களிக்கும் தகுதியை பெறும் என்று நம்பப்படுவதால் அது பழனிக்கு பெரும் மிரட்டலாகவே இருக்கும் என்று தெரிகிறது.
இந்த 2,800 கிளைகளில் பழனிக்கு ஆதரவு அளிக்கப்போகும். கிளைகள் எத்தனை?
டத்தோஸ்ரீ சாமிவேலு தனது தலைமைத்துவ காலத்தில் அமைக்கப்பட்ட கிளைகள் பெருமளவு இருக்கின்றன. அதில் பெருமளவு பழனிக்கு ஆதரவாக இருக்கும் கிளைகள் 700க்கு மேல் தாண்டாது என்பதே பழனியின் இப்போதைய கணக்காகும்.
டாக்டர் சுப்ரா தேசியத்தலைவருகான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது அவருக்கு ஆதரவாக 1,500 முதல். 1700 வரைக்குமான கிளைகள் வேட்புமனு தாக்கலில் பங்குபெறும் என்று உறுதியாகத் தெரிகிறது.
மேலும்120க்கும் மேற்பட்ட தொகுதித்தலைவர்களின் ஆதரவையும் டாக்டர் பெற்றிருப்பதும் பழனியை தற்போது கலக்கமடைய வைத்துள்ளது.
ஆதரவு நிலைப்பாடு ஒரு கேள்விக்குறி?
2009இல் இரண்டாவது முறையாக துணைத்தலைவராக வந்த பழனி, கட்சியில் தனக்குரிய ஆதரவை நிலைநாட்டுவதில் தோல்வி கண்டுள்ளார்.
அதன் பின் 2010இல் இடைக்கால தேசியத்தலைவர் என்ற வகையில் தொடர்ந்த மூன்று ஆண்டுகாலம் அதாவது 2013 வரைக்குமான காலத்தில் அவருக்குரிய நன்மதிப்பை உயர்த்தியிருக்க வேண்டும். அவர் அதிலும் கவனம் செலுத்த தவறியதால் அவரை பின் தொடர்ந்து வந்த அவரின் ஆதரவாளர்கள் பலர் இப்போது சுப்ரா அணிக்கு மாறியிருக்கிறார்கள்.
குறிப்பாக செனட்டர் ஜஸ்பால் சிங், அம்பாங் வில்சன், பத்துகேவ்ஸ் இராஜகோபால் காஜாங் ரவிசந்திரன், பகாங் செனட்டர் குணசேகரன் பூச்சோங் சக்திவேல், கோலாசிலாங்கூர் பார்த்திபன் இப்படி பலரின் மனமாற்றமும், சுப்ரா அணிக்குள் நுழைவதும் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இவர்களில் பெரும்பாலோரின் ஆதங்கம், பதிவு இலாகா மறுதேர்தலுக்கு ஆணையிட்டும் பழனி அதை கேட்காமல் மெளனம் சாதித்ததுதான்.
இதன் எதிரொலி பலரின் ஆதரவை பழனி இழக்க காரணமாகி விட்டது.
எனவே. தேசியத்தலைவருக்கான தேர்தல் மே மாத வாக்கில் நடைபெற வேண்டியிருப்பதால் அதற்குள் பழனியின் கூடாரம் பெருமளவு காலியாகிவிடும் என்றே தெரிகிறது.
அதனால் தேசியத்தலைவருக்கான தேர்தலில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார் என்றே தெரிகிறது.
தேர்தலில் தனக்குரிய வெற்றி வாய்ப்பு அறவே இல்லையானால் பழனி குருட்டுத்தனமாக ஒரு போட்டியை நிச்சயம் சந்திக்க மாட்டார்.இதனால் இறுதியில் அவரை நம்பி களத்தில் குதித்த பலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நிலைக்கு தள்ளாடுவார்கள் என்றே தெரிகிறது.
எனவே எப்படிப் பார்த்தாலும் இறுதியில் பழனி 2013ல் பிரதமர் ஏற்படுத்திய சமாதான அடிப்படையில்தான் தனது எல்லாவகையான முடிவுகளையும் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆறுதல் அடைவார்.
இதன் மூலம் அமைச்சர் பதவியை பொதுத்தேர்தல் வரை தொடர நினைப்பார். அதன்பின் அதாவது தேர்தலுக்குப்பிறகு ஏதாவது அரசாங்க வாய்ப்புக்காக காத்திருப்பார்.
எனவே மே மாத்திற்குள் இத்தகைய கூத்தடிப்பை நிச்சயம் காணலாம்!
-பெருஅ.தமிழ்மணி
(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)
தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற பேஸ்புக் அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: