கோலாலம்பூர், பிப்ரவரி 15 – கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13ஆம் தேதி 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா மத்திய செயலவையினரின் கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட மத்திய செயலவை உறுப்பினர் மட்டும் வருகை தந்ததும், கலந்து கொண்டதும், அந்த கூட்டத்தில் கலந்த கொண்ட மற்ற மத்திய செயலவை உறுப்பினர்களின் விழிகளை வியப்பால் விரிய வைத்தது.
அவர்தான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவால் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ குமார் அம்மான் (படம்).
தற்போது குமார் அம்மானுக்குப் பதிலாக டத்தோ எஸ்.சோதிநாதனை புதிய தலைமைச் செயலாளராக பழனிவேல் நியமித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டின் மத்திய செயலவையின் தலைமைச் செயலாளரான அ.சக்திவேல் கூட்டிய அந்த மத்திய செயலவைக் கூட்டம், சட்டவிரோதமானது என பழனிவேல் கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டிருந்த நிலையிலும், பழனிவேலுவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட குமார் அம்மான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுதான், தற்போது மஇகா வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வரும் பரபரப்பான அரசியல் விவகாரமாகும்.
2009ஆம் ஆண்டு மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன், அதற்கான காரணங்கள் என்ன என குமார் அம்மானை செல்லியல்.காம் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டபோது நம்மிடம் பிரத்தியேகமாகப் பேசிய குமார் அம்மான் “இதுவரை பல பத்திரிக்கை அன்பர்கள் கேட்டுக் கொண்டபோதும் வாய்திறக்காமல் இருந்த நான் இப்போது செல்லியலிடம் எனது முழு தன்னிலை விளக்கத்தை வழங்குகிறேன்” என்ற முன்னுரையுடன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.
அவர் கொடுத்த விளக்கங்களின் சாராம்சத்தை செல்லியல் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக இங்கே வழங்குகின்றோம்:-
குமார் அம்மானின் விளக்கம்
“முதலில் நான் 2009ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் எவ்வாறு நான் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதை விளக்க வேண்டும்.
அப்போது சிலாங்கூரில் உள்ள உலு லங்காட் தொகுதியின் இளைஞர் பகுதித் துணைத் தலைவராக – கட்சியில் அடிமட்டத் தொண்டர்களில் ஒருவராக -இருந்த நான், இளைஞர் பகுதியினர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இளைஞர் பகுதியின் சார்பாக மத்திய செயலவைக்கான பதவிக்குப் போட்டியிட்டேன்.
அந்தப் போட்டியில் பல மாநிலத் தலைவர்கள் எனக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்தபோதும், எனது பிரச்சாரத்தாலும், உழைப்பாலும், இளைஞர் பகுதியினரின் அமோக ஆதரவினாலும் நான் முதலாவதாக அதிக வாக்குகளில் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்”
2013இல் மீண்டும் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்
“ஆக, 2009ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், மீண்டும் 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் மத்திய செயலவைக்குப் போட்டியிட்டேன். இந்த முறை இளைஞர் பகுதி சார்பாக இல்லாமல் நேரடியாகவே போட்டியில் குதித்தேன். பேராளர்களின் அமோக ஆதரவால் ஆறாவது நிலையில் வெற்றியும் பெற்றேன்.”
“இருப்பினும் கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து என்னை தலைமைச் செயலாளராக தேசியத் தலைவர் பழனிவேல் நியமித்தார். அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு இந்த வேளையில் நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தலைமைச் செயலாளராக பதவி வகித்த குறுகிய காலத்தில் என்னால் இயன்ற கட்சிப் பணிகளை ஆற்றினேன் என்பதோடு, தேசியத் தலைவர் என்மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், கட்சிக்கு விசுவாசமாகவும் நடந்து கொண்டேன்.”
உண்ணாவிரதப் போராட்டம்
“தொடர்ந்து எனது நியமனம் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்படாத சூழ்நிலை எழுந்தபோது, நியாயத்தை வலியுறுத்தியும், கட்சியின் கௌரவத்தை, மரியாதையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கிலும் சங்கப் பதிவக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினேன்”
உண்ணாவிரதப் போராட்டத்தின் போது குமார் அம்மான்
“இந்த சூழ்நிலையில்தான் தேசியத் தலைவர் பழனிவேலுவின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதமரின் தலைமையில், மஇகா துணைத் தலைவர், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், உள்துறை அமைச்சர் ஆகியோர் நடத்திய சந்திப்பின் பலனாக, எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் என்ற முடிவும், அதிகாரபூர்வ மத்திய செயலவையாக 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையும் செயல்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டு பத்திரிக்கைகளின் வழி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது”
சக்திவேல் 2009 மத்திய செயலவையின் அதிகாரபூர் தலைமைச் செயலாளர்
“என்னைப் பொறுத்தவரையில் 2009 மத்திய செயலவைதான் அதிகாரபூர்வ இடைக்கால மத்திய செயலவை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதால் அதன்படி சக்திவேல்தான் (படம்) அதன் அதிகாரபூர்வ தலைமைச்செயலாளர் என்பதில் நான் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றேன்.
இந்த சூழலில்தான் எனக்கு சக்திவேலுவின் மத்திய செயலவைக்கான கூட்டத்திற்காக அழைப்பு கிடைத்தது. 2009 கட்சித் தேர்தலில் கடுமையான போட்டிக்கிடையில் வென்ற நானும் அந்த 2009 மத்திய செயலவையின் ஓர் அங்கம் என்பதில் யாருக்கும் இரண்டு வித கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில்அந்த 2009 மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை எனக்கு இருக்கின்றது. அதிலும் அந்த மத்திய செயலவையின் அதிகாரபூர்வ தலைமைச் செயலாளர் சக்திவேல் அந்தக் கூட்டத்தை கூட்டியதால், நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
அப்போது கூட அந்தக் கூட்டத்தில் சங்கப் பதிவகத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அதனை உறுதிப் படுத்திக் கொண்டுதான் நான் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இந்த இடத்தில் ஒன்றை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கடந்த காலங்களில் அரசியல் விருப்பு வெறுப்புகள் காரணமாக 2009 மத்திய செயலவையினர் சிலருக்கும் எனக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் அந்த கூட்டத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டேன் – நடத்தப்பட்டேன்.
அது மட்டுமல்லாமல், அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுமார் 30 நிமிடங்கள் தேசியத் தலைவருக்காக மத்திய செயலவையினர் அனைவரும் காத்திருந்தனர். அதன் பின்னரே கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் கூட்டத்திற்கு தலைமையேற்க டாக்டர் சுப்ரா அழைக்கப்பட்டார்.
அந்தக் கூட்டத்தில் தேசியத் தலைவருக்கு எதிராகவோ, கட்சித் தலைமைக்கு எதிராகவோ, கட்சி நலன்களுக்கு எதிராகவோ எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் கட்சியின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்த விவகாரங்கள் மட்டுமே பேசப்பட்டது என்பதையும் தெளிவாக இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டின் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருவேன். எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, 6 இலட்சம் உறுப்பினர்களையும் 68 ஆண்டுகால பாரம்பரியத்தையும் கொண்ட மஇகாவின் நன்மைக்காகவும், நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், உழைப்பேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்”
என குமார் அம்மான் தெளிவாக, அதே வேளையில் உறுதியுடன் செல்லியலிடம் தெரிவித்துக் கொண்டார்.
-இரா.முத்தரசன்