கோலாலம்பூர், பிப்ரவரி 20 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது பெண் தற்போது காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மூவாரைச் சேர்ந்த அந்தப் பெண் கெய்ரோ செல்வதற்கான விமானத்தில் ஏறும் முன்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமானத்தில் செவ்வாய்க்கிழமை அன்று புக்கிட் அம்மானின் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கெய்ரோவில் உள்ள 22 வயதான மலேசிய மாணவரை அப்பெண் திருமணம் செய்ய இருந்ததாகவும், பின்னர் இஸ்தான்புல் வழியாக இருவரும் சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் தெரிவித்தார்.
“மலேசியாவை தீவிரவாத மற்றும் போராளிகளின் பயிற்சிக் களமாகவும், மறைவிடமாகவும் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். இத்தகைய தொடர்புகளை உடையவர்கள் யாவரும் கைது செய்யப்படுவர்,” என்று காலிட் அபுபாக்கர் கூறினார்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் வருங்கால கணவராக வேண்டிய ஆடவர் கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அபு சாயாப் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய மேலும் 5 பேரை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-2266 7010 மற்றும் 011-2104 6850 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், CTD.E8M@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் காலிட் அபுபக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2013 முதல் இதுவரையிலான காலகட்டத்தில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 68 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.