Home நாடு அரசியல் பார்வை: சாமிவேலு இல்லாமல் பழனிவேல் தேசியத் தலைவராகி இருக்க முடியுமா?

அரசியல் பார்வை: சாமிவேலு இல்லாமல் பழனிவேல் தேசியத் தலைவராகி இருக்க முடியுமா?

704
0
SHARE
Ad

Samy-Velluகோலாலம்பூர், பிப்ரவரி 22 – பழனிவேலுவை தேசியத் தலைவராகக் கொண்டு வந்தது எனது தவறுதான் என முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அண்மையில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சாமிவேலு இல்லாமல் பழனிவேல் தேசியத் தலைவராகி இருக்க முடியுமா என்ற சர்ச்சை தற்போது காலங்கடந்து எழுந்துள்ளது.

இதன் தொடர்பில் மஇகா பினாங்கு மாநில பொருளாளர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் பழனிவேல் இரண்டு முறை தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் வென்றவர் என்பதால் அவர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் சாமிவேலுவால் மட்டும் அவர் தேசியத் தலைவராகி விடவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Henry statement Nanban 22 febஇன்றைய மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி 

Henry Statement Osai 22 Feb

இன்றைய மக்கள் ஓசை நாளிதழ் செய்தி  

இந்த சர்ச்சை இன்றைய சூழ்நிலையில் தேவையானதுதானா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

சாமிவேலு இல்லாமல் பழனிவேல் அரசியல் அரங்கில் முன்னணிக்கு – முதல் நிலைக்கு வந்திருக்க முடியுமா?

மஇகாவில் எப்படி உள்ளே வந்தார் பழனிவேல்?

g-palanivel_mic-300x198பெர்னாமாவில் அரசியல் செய்திகளை எழுதுபவராக மஇகா கூட்டங்களில் வலம் வந்து கொண்டிருந்தவர் பழனிவேல். 1980ஆம் ஆண்டுகளில் கடும் அரசியல் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த சாமிவேலுவைப் பார்க்கும் போதெல்லாம் உங்களின் தகவல் ஊடக வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை பழனிவேல் வழங்குவது வழக்கம் என அவரை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.

தான் அரசியலில் முன்னணிக்கு வரவேண்டுமானால் சாமிவேலுவுக்கு நெருக்கமான ஓர் இடத்தில் அமர வேண்டும் என பழனிவேலு திட்டம் வகுக்க –

பழனிவேலுவின் ஆலோசனைகளால் கவரப்பட்ட சாமிவேலு, அவரைப் போன்ற ஓர் இளைஞர் தனக்கு பத்திரிக்கைச் செயலாளராக வரவேண்டும் என விரும்ப –

இருவருக்கும் இடையிலான அரசியல் உறவு தொடங்கியது.

அப்போதிருந்த சாமிவேலுவின் அரசியல் செயலாளர் பரம் என்பவர் பத்திரிக்கைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு பழனிவேல் அமரவைக்கப்பட்டார்.

அப்போதிருந்தே பழனிவேலுவின் அரசியல் வியூகத்தை கவனித்தால், தான் வர நினைக்கும் இடத்தில் ஏற்கனவே இருப்பவரை ஏதாவது ஒரு வகையில் அகற்றிவிட்டு அந்த இடத்தை அவர் கைப்பற்றி முன்னேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அவ்வாறுதான் பரம் பத்திரிக்கைச் செயலாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு பழனிவேல் சாமிவேலுவின் பத்திரிக்கைச் செயலாளரானார்.

சுப்ராவும் பத்மாவும் ஒதுக்கப்பட்டது யாரால்?

Subra-Tan-Sri-Featureஅடுத்து அவர் 1990ஆம் ஆண்டில் உலுசிலாங்கூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நிறுத்தப்பட்டார். அதே ஆண்டில்தான், அப்போதைய துணைத் தலைவர் (டான்ஸ்ரீ) சுப்ராவும், உதவித் தலைவர்  டத்தோ பத்மாவும் தங்களின் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட சாமிவேலுவால் வாய்ப்பு மறுக்கப்பட்டனர்.

இதுவும் பழனிவேலு சாமிவேலுவுக்கு ஆலோசனையாக வழங்கிய வியூகம்தான் என அப்போது மஇகா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால் சாமிவேலு எதிர்பார்க்காத திருப்பமாக, அப்போதைய பிரதமர் மகாதீர் தலையிட்டு மீண்டும் சுப்ராவை செனட்டராக நியமித்து துணையமைச்சராகவும் நியமித்தார். சுப்ராவும் தொடர்ந்து துணைத் தலைவராக நீடித்து வந்தார்.

பழனிவேலு, இடைப்பட்ட காலத்தில் மஇகாவின் தலைமைப் பொருளாளராக சாமிவேலுவால் 1991ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இதுவும் நியமனப் பதவிதான்!

அடுத்த சில ஆண்டுகளில் சாமிவேலு அணியில் இருந்த முக்கியத் தலைவர்களான டான்ஸ்ரீ மகாலிங்கம், டத்தோ எஸ்.எஸ்.சுப்ரமணியம், டி.பி.விஜேந்திரன் போன்றவர்கள் ஆளுக்கொரு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள பழனிவேலுவும் 1994ஆம் ஆண்டில் கட்சியின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை சாமிவேலுவின் நியமனப் பதவிகளின் மூலமாகவே பழனிவேல் அரசியல் நடத்தி வந்தார். இன்று வரை அவர் வகித்து வரும் சிலாங்கூர் மாநிலத் தலைவர் பதவியில்கூட  அவர் சாமிவேலுவால் நியமிக்கப்பட்டவர்தான்.

துணைத் தலைவர் தேர்தலில் சுப்ரா எப்படி தோற்கடிக்கப்பட்டார்?

Subra-Dr-Feature---12004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் சுப்ராவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சாமிவேலு வாய்ப்பு வழங்கவில்லை.

அவருக்குப் பதிலாக அதே பெயல் கொண்டவர் என்ற காரணத்திற்காக, டாக்டர் சுப்ரமணியத்தை செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்தார் சாமிவேலு.

அந்த டாக்டர் சுப்ரமணியம்தான் இன்றைக்கு தனது சொந்த திறமையாலும், உழைப்பாலும், கட்சியின் துணைத் தலைவராகவும் உயர்ந்து அடுத்த தேசியத் தலைவராகப் பார்க்கப்படும் நிலைமைக்கு வந்துள்ளார்.

துணையமைச்சராக டான்ஸ்ரீ சுப்ரா இல்லாத காரணத்தால், அரசியல் ரீதியாக பலவீனப்பட்டு இருந்தவரை, பல்வேறு அரசியல் காரணங்கள் கூறி சுப்ராவோடு என்னால் வேலை செய்யமுடியாது – அவரை மாற்ற வேண்டும் என்ற அறைகூவலோடு 2006ஆம் ஆண்டு கட்சித்தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கினார் சாமிவேலு.

சுப்ராவுக்குப் பதிலாக பழனிவேலுவை ஆதரிக்கின்றேன் என்று சாமிவேலு கூறினார். 2006ஆம் ஆண்டுப் பிரச்சாரத்தின்போது எந்த இடத்திலும் பழனிவேல், வாய் திறக்கவில்லை, மாறாக, சாமிவேலுவின் முடிவுக்குக் கட்டுப்படுகின்றேன் என்று மட்டும் கூறினார்.

இது எனக்கும் சுப்ராவுக்கும் நடக்கும் போட்டி, நான் வேண்டுமா சுப்ரா வேண்டுமா முடிவு செய்யுங்கள் என்றெல்லாம் சாமிவேலு பிரச்சாரம் செய்ததால்தான் பேராளர்கள் பெருமளவில் திரண்டு பழனிவேலுவுக்கு வாக்களித்து 2006 கட்சித் தேர்தலில் அவரை வெற்றியடையச் செய்தனர்.

2009ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இதே நிலைமைதான்.

சாமிவேலு பகிரங்கமாக பழனிவேலுவுக்கு ஆதரவு தந்து, பேராளர்களுக்கு நெருக்குதல் தராமல் இருந்தால் பழனிவேல் துணைத்தலைவராக மீண்டும் வென்றிருக்க முடியாது. காரணம் சுமார் 80 வாக்குகள் வித்தியாசத்தில்தான் 2009இல் பழனிவேல் துணைத் தலைவராக வென்றார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Sothi---Featureபோதாக்குறைக்கு இன்றைக்கு பழனிவேல் பின்னால் முதல் தளபதியாக நிற்கும் டத்தோ சோதிநாதன் 2009இல் மூன்றாவது வேட்பாளராக நிற்காமல் இருந்திருந்தால், சுப்ரா சுலபமாக துணைத் தலைவராக வென்றிருக்க முடியும் என்பது இன்றுவரை மஇகா பார்வையாளர்கள் வலியுறுத்தும் ஆருடமாகும்.

தனக்கு நெருக்கமான – தனது முன்னாள் அரசியல் செயலாளரான சோதிநாதன் களத்தில் குதித்தும் – பழனிவேலுவுக்கு தனது உறுதியான ஆதரவை சாமிவேலு வழங்கினார். அதனால்தான் குறுகிய வாக்கு வித்தியாசத்திலாவது பழனிவேல் வெல்ல முடிந்தது.

எனவே, 2006, 2009 கட்சித் தேர்தல்களில் நிச்சயம் சாமிவேலுவின் ஆதரவு இல்லாமல் பழனிவேலுவால் சுப்ராவை வென்றிருக்க முடியாது.

இன்னொருவரை சாமிவேலு தேசியத் தலைவராகக் கொண்டு வந்திருக்க முடியும்

Samy Vellu and Palanivelஎல்லாவற்றுக்கும் மேலாக, 2010ஆம் ஆண்டில் சாமிவேலு பதவி விலக முடிவெடுத்த போது, அடுத்த தலைவராக யாரைக் கொண்டு வருவது என்பதில் அவருக்கு பல தேர்வுகள் இருந்தன.

மீண்டும் தேசியத் தலைவர் தேர்தலை நடத்தி போட்டியிடாமல் அவர் ஒதுங்கிக் கொண்டிருந்தால், அந்தத் தேர்தல் எப்படி இருந்திருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.

இன்னொரு தேர்வாக, டான்ஸ்ரீ சுப்ரமணியத்தோடு பகைமைகளை மறந்து அவர் கைகோர்த்திருந்தால், அவரையும் அவர் அடுத்த தேசியத் தலைவராக கொண்டு வந்திருக்க முடியும்.

அப்படி அவர் செய்திருந்தால் கட்சியும் டான்ஸ்ரீ சுப்ராவை முழுமனதோடு ஏற்றிருக்கும் – அம்னோவும் தேசிய முன்னணியும் கூட அந்த முடிவை ஏகோபித்து ஆதரித்திருப்பார்கள். டான்ஸ்ரீ சுப்ராவுக்கும் அம்னோ, தேசிய முன்னணி தலைவர்களுக்கும் இடையில் இருந்த நெருக்கம் அனைவரும் அறிந்ததே!

சாமிவேலுவுக்கு இன்னொரு வாய்ப்பு இருந்தது.

உதவித் தலைவராக இருந்த டாக்டர் சுப்ராவைக் கூட அவரால் இடைக்கால தேசியத் தலைவராக நியமித்திருக்க முடியும். மத்திய செயற்குழுவும் கைகட்டி வாய் மூடி அத்தகைய முடிவை ஏற்றுக் கொண்டு ஆதரிக்கும் நிலைமைதான் அன்றிருந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இப்படி தனக்கு முன்னே பல வாய்ப்புகள் இருந்தும், பழனிவேலுவை சாமிவேலு அடுத்த தேசியத் தலைவராக அங்கீகரித்தார் – அதனால்தான் பழனிவேல் மஇகாவின் 8வது தேசியத் தலைவராக தேர்வாக முடிந்தது.

ஆக,

எந்தக் கோணத்தில் பார்த்தாலும், சாமிவேலு இல்லாமல், பழனிவேல் மஇகா அரசியலில் நுழைந்திருக்கவும் முடியாது – பதவிகளைப் பெற்றிருக்கவும் முடியாது – இன்றுவரை மஇகாவில் நிலைக்கவோ, நீடித்திருக்கவோ முடிந்திருக்காது –

என்பதுதான் நிதர்சனமாக உண்மை!

-இரா.முத்தரசன்