மும்பை, பிப்ரவரி 23 – மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபிக் கடலில் அமைக்கப்பட உள்ள வீர சிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூபாய் 1900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு.
குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய இரும்பு சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் பட்நாவிஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மும்பையில் அரபி கடலில் வீரசிவாஜிக்கு சிலையுடன் கூடிய மிகப் பெரிய நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மும்பையில் உள்ள நாரிமன் முனையில் இருந்து சுமார் 2.6 கிமீ தொலைவில் அரபி கடலில் 16 ஏக்கர் பரப்பளவில் பாறை தீவாக இது அமைக்கப்பட உள்ளது. அதன் மைய பகுதியில் 19 அடி உயரத்திற்கு வீர சிவாஜியின் சிலை அமைய உள்ளது.
இதற்கான பணிகளை மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. இந்த நினைவிடம் மும்பை ராஜ்பவனில் இருந்து 1.2 கிமீ தொலைவில் கடலில் அமைகிறது.
ஏற்கனவே மும்பை தாக்குதல், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த நினைவிடத்திற்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் அடங்கிய தனியான பாதுகாப்புத்துறையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூபாய் 1900 கோடியில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளது. 2019 இல் இந்த நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டதும், நாள் ஒன்றிற்கு சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வரை வந்து செல்வர் என்றும் மதிப்பிடப்படுகிறது.