கோலாலம்பூர், பிப்ரவரி 24 – இனி மலாயன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசிகளிலேயே தங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகையை மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக வசதி ‘மேபேக்ங்2யூ‘ (Maybank2U) செயலியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசியின் ஒற்றை பொத்தான் அழுத்தத்தின் மூலம் வங்கிக் கணக்கின் நிலை குறித்தும், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல், இருப்புத் தொகை குறைந்து வந்தால் அதனை கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மலாயன் வங்கியின் நிதி பிரிவிற்கான தலைவர் ஹமிருல்லாஹ் பூர்ஹான் கூறுகையில், “நவீன தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தவும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு பற்றிய அடிப்படை தகவல்களை கையடக்கக் கருவியிலேயே பெற்றுக்கொள்ளவும் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.”
“வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சமயங்களில் தங்கள் கையிருப்புத் தொகை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படியான தருணங்களில் அவர்கள் விரிவான பயன்பாட்டை எதிர்பார்க்கமாட்டார். அதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘க்விக் பேலன்ஸ்‘ (Quick Balance) சேவை வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேபேக்ங்2யூ செயலியில் இந்த புதிய சேவையை பெற வேண்டுமெனில் நாம், க்விக் பேலன்ஸிற்கான 6 இலக்க இரகசிய எண்ணை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.