கான்பெரா, பிப்ரவரி 25 – உலக்கோப்பை கிரிக்கெட்டின் நேற்றைய 15-வது லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் விளையாடியது.
கெய்ல் (215), சாமுவேல்ஸ் (133 அவுட் இல்லை) ஆகியோரின் அபார ஆட்டத்தால் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் குவித்தது. பின்னர் 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஜிம்பாப்வே அணிக்கு 48 ஓவரில் 363 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி ஜிம்பாப்வே சென்றபோதும் விக்கெட்டுக்கள் அடிக்கடி சரிந்தன. ஜிம்பாப்வே 44.3 ஓவரில் 289 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணி சார்பில் வில்லியம்ஸ் 76 ரன்களும், எர்வின் 52 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் டெய்லர் மற்றம் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது. இரட்டை சதம் அடித்த கெய்ல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.