சிட்னி, மார்ச் 26 – இன்று இங்கு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் கடந்த உலகக்கிண்ண வெற்றியாளரான இந்தியா இரண்டாவது முறையும் கிண்ணத்தை வென்று சாதனை படைக்கும் கனவு கலைந்தது.
இருப்பினும், இந்த தடவை உலகக் கிண்ணப் போட்டிகளில் ஓர் ஆட்டத்திலும் தோல்வி காணாத சாதனையைப் படைத்த இந்தியா அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத் தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னமானது.
11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது. இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் இந்த இரண்டு நாடுகளுமே இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது எதிர்பாராத திருப்பமாகும்.
முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சிட்னியில் இன்று 2–வது அரைஇறுதியில் முதலில் இந்தியா பந்து வீச, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 329 ஓட்டங்கள் எடுத்தால்தான் வெற்றியடைய முடியும் என்ற கடுமையான இலக்கோடு இரண்டாவது பாதி ஆட்டத்தில் களமிறங்கியது.
ஆனால், இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்து 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா வரும் ஞாயிறன்று நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.
படங்கள்: EPA