சிங்கப்பூர், மார்ச் 26 – திங்கட்கிழமை அதிகாலை காலமான சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் நல்லுடல் தற்போது சிங்கப்பூர் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருக்கின்றது.
சாதாரண குட்டித் தீவாக இருந்த தங்கள் நாட்டை, தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து, உலகின் உன்னத நாடுகளில் ஒன்றாக, செல்வம் கொழிக்கும் – சிறந்த முன்னுதாரண நாடாக உருமாற்றிய தங்களின் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கானோர் வெயில், மழையென்று பாராமல் வரிசைகளில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஏறத்தாழ 4 அல்லது 5 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே மக்கள் இறுதி மரியாதை செலுத்த முடிகின்றது என்றாலும், தங்களின் தலைவனுக்கு இறுதி பிரியாவிடை தருவதற்கு மக்கள் வரிசை பிடித்து நிற்கின்றனர்.
லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்தும் சிங்கப்பூர் மக்களின் சில காட்சிகள் இவை:-
சிங்கப்பூரின் இஸ்தானா அதிபர் மாளிகையில் ஸ்ரீ துமாசிக் அறையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு 24 மார்ச் அன்று இறுதி மரியாதை செலுத்தும் சிங்கை பிரதமரும், லீ குவான் இயூ மகனுமான லீ சியன் லூங் அவரது மனைவி ஹோ சிங் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர்.
லீ குவான் இயூவிற்கு மக்கள் ஆங்காங்கே இறுதி மரியாதை செலுத்த சில சிறப்பு நினைவிடங்களை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக மண்டபத்தில் மக்கள் பூக்கள் வைத்து தங்களின் தலைவனுக்கு நேற்று (25 மார்ச் ) மரியாதை செலுத்தும் காட்சி…
மார்ச் 24ஆம் தேதி – சிங்கப்பூரின் இஸ்தானா அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த லீ குவான் இயூ நல்லுடலுக்கு மரியாதை செலுத்த அதிகாலை வேளையிலும் வரிசை பிடித்து நிற்கும் சிங்கப்பூர் மக்கள்…
25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லுடல் இராணுவ வாகனத்தின் மூலம் சிங்கப்பூர் இஸ்தானா அதிபர் மாளிகையிலிருந்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, மக்கள் வழியெங்கும் சாலைகளில் குவிந்து நின்று தங்களின் இறுதி மரியாதைகளை செலுத்தினர்
24 மார்ச் 2015 – இஸ்தானா அதிபர் மாளிகைக்கு வெளியே அஞ்சலிக்காக மலர்கள் குவிக்கப்பட்டிருக்க – சோகத்தில் கட்டியணைத்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்ளும் தம்பதியர்..
25 மார்ச் 2015 – இராணுவ வாகனத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இஸ்தானா அதிபர் மாளிகையிலிருந்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு லீ குவான் இயூவின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டபோது, அந்த சரித்திர தருணத்தை தங்களின் கைத்தொலைபேசிகளில் படம் பிடித்து வைக்கும் பொதுமக்களில் சிலர்…
25 மார்ச் 2015 – இராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தி நிற்க – நாடாளுமன்றக் கட்டிடத்தில் மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருக்கும் லீ குவான் இயூவின் நல்லுடல்
25 மார்ச் 2015 – நாடாளுமன்ற கட்டிடத்தில் லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் தனது துணைவியார் மேரி டான்னுடன் சிங்கைப் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
25 மார்ச் 2015 – நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருக்கும் லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வெளியே வெயிலில் வரிசை பிடித்து நிற்கும் பொதுமக்கள்…
படங்கள்: EPA