Home அவசியம் படிக்க வேண்டியவை 1எம்டிபி நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் 5 பில்லியன் ரிங்கிட் கடன்!

1எம்டிபி நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் 5 பில்லியன் ரிங்கிட் கடன்!

729
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டையே உலுக்கி வருவதோடு, நஜிப்பின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாகியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்த புதிய புதிய சர்ச்சைக்குரிய தகவல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

1 MDB POSTERஇந்நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் மட்டும் 5.037 பில்லியன் ரிங்கிட் கடன் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு வழங்கியுள்ள எழுத்துபூர்வமான இரண்டு வரி பதிலில் பிரதமரும், நிதி அமைச்சருமான நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒருவர் ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்த அமைச்சரின் அமைச்சு குறித்த விவகாரங்கள் குறித்து எழுத்துபூர்வமான கேள்விகளைச் சமர்ப்பிக்க முடியும். அந்த கேள்விகளுக்கான பதில்களை அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் வழங்குவார்கள்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 1எம்டிபி நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் உள்ள கடன்கள் எவ்வளவு என்றும், பேங்க் நெகாரா எனப்படும் மலேசிய மத்திய வங்கியால் ஆகக் கடைசியாக தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கைகளின்படி, ஒவ்வொரு கடனும் குறித்த நிலவரங்கள் என்ன என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி நிதி அமைச்சர் நஜிப் துன் ரசாக்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

1 எம்டிபி கடனால், ஏம்பேங்க் வங்கிக்குப் பிரச்சனையா?

najibநஜிப் நாடாளுமன்றத்தின் மூலமாக எழுத்து பூர்வமாக வழங்கிய பதிலைத் தொடர்ந்து ரபிசி மற்றொரு பிரச்சனையையும் எழுப்பியிருக்கின்றார்.

பேங்க் நெகாரா, அராப் மலேசியா வங்கி எனப்படும் எம் பேங்க் (AM BANK) மீதான தனது தணிக்கை ஆய்வில், 1எம்டிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைகளால், அந்த வங்கி நிதிப் பிரச்சனைக்கு ஆளாகக் கூடும் என்ற எச்சரிக்கையை விடுத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே, தான் இந்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பியதாகவும் ரபிசி தகவல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பண்டார் மலேசியா புரொபர்ட்டி டெவலப்மெண்ட் எனப்படும் 1எம்டிபியின் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரிங்கிட் கடன் கொடுத்ததன் காரணமாக எழுந்த பிரச்சனைதான் எம்பேங் குழுமத்தின் தலைமை நிர்வாகி அசோக் ராமமூர்த்தி பதவி விலகிச் செல்வதற்கான காரணம் என இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரபிசி கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், ரபிசியின் கூற்றுகளில் உண்மையில்லை என்றும், நீண்ட காலமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து கோலாலம்பூரில் வசித்து வந்ததன் காரணமாக, தனது குடும்பத்தினரோடு மீண்டும் இணைந்து கொள்ள அவர் மெல்போர்ன் நகருக்குத் திரும்பினார் என்றும் எம் பேங்க் நிர்வாகம் பதில் தெரிவித்திருந்தது.

உள்நாட்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் மீதான விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க நிதி அமைச்சரான நஜிப் மறுப்பதிலிருந்து தான் எழுப்பி வரும் கேள்விகளில் உண்மையிருக்கின்றது என்றும் இதனால் எம்பேங்க் மீதிலான பேங்க் நெகாராவின் தணிக்கை அறிக்கை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது என்றும் ரபிசி தெரிவித்துள்ளார்.

1எம்டிபி உள்நாட்டு வங்கிகளிடம் பெற்ற கடன்கள் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், நாட்டின் ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்கே பாதிப்பு ஏற்படப் போகின்றது என்றும் ரபிசி எச்சரித்துள்ளார்.

-இரா.முத்தரசன்