Home Featured உலகம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறேனா? – சகோதரியின் கருத்தால் லீ சியான் லூங் வருத்தம்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறேனா? – சகோதரியின் கருத்தால் லீ சியான் லூங் வருத்தம்!

951
0
SHARE
Ad

LeeHsienLoongசிங்கப்பூர் – ‘அதிகார துஷ்பிரயோகம்’ செய்ததாக தன் மீது குற்றம் சாட்டியுள்ள தனது சகோதரி லீ வெய் லிங்கின் கருத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் பேஸ்புக் மூலமாகப் பதிலளித்துள்ளார்.

நேற்று இது குறித்து லீ சியான் லூங் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், “மறைந்த மரியாதைக்குரிய லீ குவான் இயூவின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதன் தொடர்பில் நான் எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தேன் என்று எனது சகோதரி டாக்டர் லீ வெய் லிங் கூறியிருப்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகின்றேன். அந்தக் குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமரர் லீ குவான் இயூவின் நினைவு நாளை அனுசரிக்கும் பொருட்டு, தான் ஒரு இராஜ வம்சத்தை (சாம்ராஜ்யம்) உருவாக்க நினைப்பதாக லீ வேய் லிங் கூறியிருப்பது முற்றிலும் தவறு என்றும் லீ சியான் லூங் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

லீ குவான் இயூவிற்கு மரியாதை செலுத்த விரும்பிய பெரும்பான்மையான சிங்கப்பூரர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டே தனது அமைச்சரவை அம்முடிவை எடுத்ததாகவும், அதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளையும், ஏற்பாடுகளையும் பரிசீலித்த பின்னரே அதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

மேலும், தகுதியுடையவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது சிங்கப்பூரின் அடிப்படை நிலைப்பாடுகளுள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ள லீ, அதையும் மீறி ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ முயற்சிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் தானோ, மக்கள் செயல் கட்சியோ, சிங்கப்பூர் பொதுமக்களோ சகித்துக் கொள்ள முடியாது என்றும் லீ சியான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டாக்டர் லீ வெய் லிங் எழுதிய கட்டுரை ஒன்றில், தமது தந்தையின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் மூலம் தனது சகோதரர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கட்டுரை ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியிடுவதற்காக அவர் அனுப்பி வைத்தும் கூட, அதை அவர்கள் பிரசுரிக்கவில்லை என்றும் சிங்கப்பூர் ஊடகங்கள் கூறுகின்றன.

அதனையடுத்து லீ வெய் லிங் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “உண்மையாக இருப்போம். கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சிகளே இன்னும் (நினைவில்) ஒளிமயமாக இருக்கிறது. அதனை யாரும் அதற்குள் மறந்துவிடப்போவதில்லை. ஆனால் தனது அதிகாரத்தைக் கொண்டு அவர் (லீ சியான் லூங்) ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ நினைத்தால், எல்கேயு (லீ குவான் இயூ)-வின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் சின்னத்தனமாக மகன் நடந்துகொண்டால், எல்கேயு-வின் மகள் அதை அனுமதிக்க மாட்டாள்” என்று கூறியதாகவும் பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும் சிட்னி மார்னிங் ஹெரால்டு தெரிவித்துள்ளது.

‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு டாக்டர் லீ வெய் லிங் அனுப்பி வைத்த மின்மடல்கள் சிலவற்றின் நகல்களை தனது பேஸ்புக்கில் நேற்று பதிவு செய்திருந்த லீ சியான் லூங், பின்னர் அதனை நீக்கியுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து, தான் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ முயற்சி செய்வதாக தனது சகோதரி கூறும் குற்றச்சாட்டு நியாயமில்லை என்றும் லீ சியான் லூங் வாதிட்டு வருகின்றார்.