மெல்பர்ன், மார்ச் 30 – கிரிக்கெட் உலக கோப்பையை ஐந்தாவது முறையாக வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. நேற்று நடந்த கிரிக்கெட் உலக கோப்பை இறுதியாட்டத்தில் முன்னதாக டாஸ் வென்று களமிறங்கிய நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
நியூசிலாந்து அணி தொடக்க வீரர் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து குப்தில் , வில்லியம்சன் சொற்ப ரன்களில் அவுட் ஆக, நியூசிலாந்து அணி தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய எலியாட், டெய்லர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக விளையாடிய எலியாட் 83(82) ரன்கள் எடுத்தார். மறுமுனையில் டெய்லர் 40 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆன்டர்சன், ரோன்சி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவர்களில் வெற்றிக் கனியை சுவைத்தது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கிளார்க் 74(71) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித் 56(71) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலககோப்பை 5 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1987-ல் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக உலககோப்பையை வென்றிருந்தது.
இதனையடுத்து 1999ல் ஸ்டீவ் வாக்கும், பின்னர் 2003 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் ரிக்கி பான்டிங் தலைமையிலான அணியும் உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.