Home நாடு “ஐஜிபி-ஐ காருடன் சேர்த்து கொளுத்துவோம்” – மர்ம கும்பல் கொலை மிரட்டல்

“ஐஜிபி-ஐ காருடன் சேர்த்து கொளுத்துவோம்” – மர்ம கும்பல் கொலை மிரட்டல்

648
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர், பிப்ரவரி 25 – தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரை காருடன் எரித்து கொலை செய்யப்போவதாக மர்ம கும்பல் ஒன்று நட்பு ஊடகங்களின் வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளது.

‘அனானிமஸ் மலேசியா – Anonymous Malaysia’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த 1 நிமிடம் 28 வினாடிகள் கொண்ட காணொளியில் மலாய் மொழியில் பேசியுள்ள மர்ம நபர், “ஜனநாயகத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தின் தலைவரை மலேசியர்களால் மாற்ற முடியுமா? ஜனநாயகத்தின் மூலம் நாட்டின் தலைமை நீதிபதியை மாற்ற முடியுமா? ஜனநாயகத்தின் மூலம் தேசிய காவல்படைத் தலைவரை மாற்ற முடியுமா?”

“முடியாது. இந்த மூன்று நபர்கள் தான் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள். எனவே ஏஎம்ஏடி (Anak Malaysia Anti-Democracy ) என்ற அமைப்பைச் சேர்ந்த நாங்கள் ஐஜிபி-ஐ அவரது காருடன் சேர்த்து கொளுத்தப் போகிறோம். இதனால் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் வகிக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்து ஜனநாயகத்தை ஏமாற்றும் குற்றங்களை செய்ய அஞ்சுவார்கள்” என்று அந்த மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

‘ரிமைண்டர் டு த ஐஜிபி – Reminder to the IGP’ என்ற பெயரில் நேற்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியை இதுவரை 5,614 பேர் பார்வையிட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, இதே போன்றதொரு காணொளி ‘ஐஎஸ்ஐஎஸ் மலேசியா 69’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதில் முகமூடி அணிந்த நால்வர், பிப்ரவரி 18-ம் தேதி காலை 11.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு முன் வெடிபொருட்களை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர். ஆனால், அதை அவர்கள் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.