கோலாலம்பூர், பிப்ரவரி 26 – (நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மஇகாவில் நிகழப் போகும் மாற்றங்கள் குறித்து, மூத்த அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
தற்போதைய தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் நீதிமன்றம் சென்றிருப்பதால் கட்சியின் உள்விவகாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலையிட்டு ம இ கா உள்விவகாரத்தை தீர்த்து வைக்க மேற்கொண்ட முயற்சி மூன்று முறையும் தோல்வி கண்டுள்ளதால், மஇகாவை தேசிய முன்னணியிலிருந்து நீக்கி வைக்க பெருமளவு சாத்தியம் உருவாகலாம் என்று அந்த நம்பத்தகுந்த ம இ கா வட்டாரம் உறுதிப்படுத்தியது.
அவரே பல முறை சங்கப் பதிவகம் மஇகாவுக்கு எதிராக அனுப்பியுள்ள கடிதங்களை மீட்டுக்கொள்ளவில்லையானால், அதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, இவ்வாரம் திங்கட்கிழமை சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இதனால் கட்சியில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.
அவரின் இந்த நடவடிக்கையால் அமைச்சரவையிலிருந்து அவர் நீக்கப்படலாம் அல்லது அவராகவே விலகிக்கொள்ளவும் சாத்தியம் உண்டு என்று தெரிகிறது.
முக்கிய தலைவர்களை பழனிவேல் நீக்கப் போகின்றார்?
அதே வேளை இவர் ஏற்கனவே ஏ.சக்திவேல், டத்தோ வி.எஸ். மோகன், டத்தோ ஜஸ்பால்சிங் போன்றவர்களை நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே அப்படியொரு தொடர் நடவடிக்கையை அவர் தொடருவாரேயானால் ஒரே இரவுக்குள் அம்னோ பாரு உருவானது மாதிரி, ம இ கா பாருவும் உருவாகலாம் என்று தெரிகிறது.
அப்படி உருவாகிற ம இ கா பாருவுக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நான்கு செனட்டர்கள் ஆதரவுடன் அக்கட்சி இயங்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில். ம இகா பாருவை உடனடியாக தேசிய முன்னணியில் சேர்க்கப்பட்டு பழைய ம இ காவுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்று அந்த நம்பத்தகுந்த ம இ கா வட்டாரம் தெரிவித்தது.
மஇகா பதிவு ரத்தாகவும் சாத்தியம் உண்டு!
அண்மைய காலமாக பழனியின் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அவரின் தன்மூப்பான நடவடிக்கைளால்; கட்சியின் பதிவு ரத்தாகும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஒரு சமயம் கட்சியின் பதிவு ரத்தானால்; தான் மேற்கொண்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும். புஸ்வாணமாகிவிடும்.அதனால் பழைய ம இகா மாபெரும் கேள்விக்குறியோடு நிறுத்தப்படலாம்.
அடுத்து சந்திக்கப்போகும் பொதுத்தேர்தலிலும் பாரிசான் அக்கட்சிக்குரிய கதவை முற்றாக. இழுத்து மூடிவிடுமேயானால் ;அடுத்த வாய்ப்புக்காக எதிர்க்கட்சி வீட்டுக்கதவைத் தட்டுவதைத்தவிர வேறு வழியில்லையென்றே தெரிகிறது.
இருப்பினும் இக்கட்டுரை வெளிவரும் நேரத்தில் கூட ,பழனியின் திடீர் அந்தர்பல்டியால் ம. இ கா பாரு உருவாகாமல் கூட தடைப்படலாம்!
இதற்கிடையில். வரும் 9.3.2015இல் பழனி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்து, அந்த வழக்கின் தீர்ப்பின்படி சங்கப் பதிவகம் 6.2.2015இல் வழங்கிய கடிதத்தை மீட்டுக்கொள்கிற நிலை ஏற்படுமானால் பழனி 2016 வரை தலைவராக நீடிக்க வழிவகுக்கும்!
அதையொட்டி பழனியும் அவரின் அணியினரும் போடும் ஆட்டம் பாட்டத்தைப் பொறுத்தே கட்சியில் அமைதி நிலைக்குமா? அமைதி சீர்குலையுமா? என்பதை கணிக்க முடியும்.
எனவே! பழனியின் திடீர் குழப்பங்களே இன்றைக்கு கட்சியில் நிகழும் எல்லா குழப்பங்களுக்கும் காரணமாக அமைகிறது என்பதை அனைவரும் ஆராய்ந்து பார்த்தால், உண்மை நிலையை அறிய முடியும்.
-பெரு.அ.தமிழ் மணி
(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)
தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற பேஸ்புக் அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: