Home நாடு “அவர்களை முடித்துக் காட்டுகின்றேன்” – கூ.பிரதேச கிளைத் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பழனிவேல் சபதம்!

“அவர்களை முடித்துக் காட்டுகின்றேன்” – கூ.பிரதேச கிளைத் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பழனிவேல் சபதம்!

821
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 27 – மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான இழுபறிப் போராட்டத்தில், தேசியத் தலைவர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ள நிலையில், நடப்பு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொடர்ந்து தொகுதி வாரியாக கிளைத் தலைவர்களைச் சந்தித்து தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

mic-palanivel-300x199நேற்று (பிப்ரவரி 26) மாலை 7.30 மணியளவில், தலைநகர் செந்துல் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பழனிவேல் கூட்டரசுப் பிரதேச மஇகா கிளைத்தலைவர்களைச் சந்தித்ததாகவும், ஏறத்தாழ 130 கிளைத் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

பழனிவேலுவின் பிரச்சார உரையில் தேசியத் தலைவருக்கான போட்டியில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் என மீண்டும் அறிவித்த பழனிவேல், தனக்கு எதிராக தலைமைத்துவப் போராட்டத்தை நடத்தி வருபவர்கள் மீது கடுமையாக சாடியதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

ஒரு கட்டத்தில் ‘அவர்களை முடித்துக் காட்டுகிறேன்’ என்றும் பழனிவேல் சவால் விட்டு சபதமிட்டுள்ளார்.

இதே கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன், ஆகியோரும் உரையாற்றினர்.

தற்போது பழனிவேலுவின் பிரச்சாரக் கூட்டங்களில் முன்னணி, நட்சத்திரப் பேச்சாளராக இடம் பெற்று வருபவர் சோதிநாதன்தான். பழனிவேலுவின் பிரச்சார நடவடிக்கைகளை முன்னின்று நடத்தி வருபவரும் சோதிநாதன்தான் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பழனிவேலுவால் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிகாம்புட் தொகுதித் தலைவர் டத்தோ ராஜூவும் இந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

பத்து தொகுதி தலைவரும், சங்கப் பதிவகம் மீது வழக்கு தொடுத்தவருமான ஏ.கே.ராமலிங்கமும் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை டத்தோ ராஜூவுடன் இணைந்து செய்தார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

பழனிவேலுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் சில முக்கியத் தலைவர்களும், மற்ற மாநிலங்களிலிருந்து வருகை தந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.