புத்ராஜெயா, பிப்ரவரி 27 – அல்தான் துயா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருலை நாடு கடத்தக் கோரும் விண்ணப்பம் ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்கும் என அந்நாட்டின் குடிநுழைவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டத்தன் தெரிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியுடனான சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக அவர் கூறினார். எனினும் நாடு கடத்தும் விவகாரம் தொடர்பில் பல சட்ட நடைமுறைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“மலேசியா மீதும் அதன் சட்ட அமைப்பின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். எனினும் சைருல் விவகாரம் தொடர்பில் பல சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. எனவே அதற்கு சிறிது காலம் ஆகும்,” என்றார் பீட்டர் டத்தன்.
அல்தான் துயா கொலை வழக்கில் சைருலுக்கு கூட்டரசு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். கடந்த ஜனவரி 20ஆம் தேதி குயின்ஸ்லாந்தில் வைத்து ஆஸ்திரேலிய குடிநுழைவுத் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
சைருலை நாடு கடத்த வேண்டும் என மலேசிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் சொந்த நாட்டில் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளும் ஒருவரை நாடு கடத்த ஆஸ்திரேலியா சட்டம் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.