கோலாலம்பூர், பிப்ரவரி 28 – மலேசிய கலை உலகம் எண்டர்பிரைஸ் நிறுவனம் ஏற்பாட்டில் 2014-ம் ஆண்டு வெளிவந்த மலேசிய திரைப்படங்களுக்கான விருது விழா, நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது.
மலேசிய திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழாவில் பெரும்பாலான கலைஞர்கள் மற்றும் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
அதேவேளையில், மலேசிய கலை உலகம் நிறுவனத்தின் ஆசிரியர் எஸ் பி சரவணன், நிர்வாகிகள் குருஸ்ரீ சந்திரமோகன், அக்னி சுகுமார், மலேசிய கலை உலகம் நிகழ்ச்சிகளின் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் ஆகியோருடன் அந்நிறுவனத்தைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்களும் நிகழ்ச்சி நிறைவடையும் வரை அனைவரையும் வரவேற்று உபசரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர்.
இந்த விழாவில், 2014-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம், தொலைக்காட்சி படம், குறுந்தட்டு படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் சிறந்த படைப்புகளின் அடிப்படையில் மொத்தம் 39 பிரிவிகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகள் குறித்து முன்பே அறிவித்திருந்ததால் விருது வாங்கும் கலைஞர்கள் அனைவரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தயாராக வந்திருந்தனர். அதில் ஒரு சிலர் மட்டும் தவிர்க்க இயலாத காரணங்களால் விருது விழாவிற்கு வரவில்லை. அவர்களுக்குப் பதிலாக அவர்களது பிரதிநிதிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழா தொடங்குவதற்கு முன்பாக, மலேசிய கலைத்துறையின் வரலாற்றை கூறும் காணொளி ஒன்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அதில் மலேசிய கலைத்துறை தொடங்கிய நாள் முதல் இன்றைய வெற்றிப்படங்கள் வரை கடந்து வந்த பாதை திரையிட்டுக் காட்டப்பட்டது.
மலேசிய கலை உலகம் அறிவிப்பாளர்கள் சிவசங்கர், நீத்தா கிருஷ்ணன், சுவர்ணா, நிவேந்திரா, தாசன் ஆகியோர் கலகலப்பாக விழாவை வழிநடத்தினர். அரங்கிலிருந்த கலைஞர்கள் அவர்களின் பேச்சுகளுக்கிடையே அறிவிப்பாளர்கள் பாணியிலேயே கிண்டல் செய்தது நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கியது.
விருது விழாவில் சில காணொளிகளில் தமிழ் வாணி கருணாநிதி, யுவாஜி ஆகியோரின் கணீர் குரலில் தூய தமிழிலான பின்னணி குரல் அழகு சேர்த்தது.
மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர்
சரியாக இரவு 10.00 மணியளவில் மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர் யார் என்பதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், சில நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பின், மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர் டெனிஸ் குமார் என்பது அறிவிக்கப்பட்டது. பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷங்களுடன் டெனிஸ் குமாருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
வாக்களிப்பு தொடங்கிய ஆரம்ப கட்டத்தில், டெனிஸ் குமாரை விட விகடகவி மகேன் தான் அதிக வாக்குகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் அடுத்து வந்த சில நாட்களில் மகேனுக்கு இணையாக வாக்குகளைப் பெற்று வந்த டெனிஸ் குமார் இறுதியில் 3492 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். மகேன் 2667 வாக்குகள் பெற்றார்.
இவர்களை அடுத்து நடிகர் சி.குமரேசன் 1443 வாக்குகளும், ஜாஸ்மின் 1140 வாக்குகளும் பெற்றனர். இந்த போட்டியில் இடம்பெற்றிருந்த புன்னகைப்பூ கீதா மற்றும் கேஸ் வில்லன்ஸ் ஆகிய இருவரும் முறையே 391 மற்றும் 319 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர்.
மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு பேஸ்புக் மூலமாக வெளிப்படையான முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
மலேசியக் கலைத்துறையில் தனது இளம் வயது முதல் நடித்து வருபவர் நடிகர் கேஎஸ். மணியம். ஆரம்ப காலத்தில் நாடகங்களில் அறிமுகமாகியவர் பின்னர் பல்வேறு மலேசிய தொலைக்காட்சி படங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவைகளில் தனது தனித்துவமான நடிப்பாற்றலாலும், தெளிவான வசன உச்சரிப்பினாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.
மலேசிய சினிமாவில் இத்தனை வருடங்கள் சிறப்பான பங்களிப்பினை செய்த கேஎஸ் மணியம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படும் நேரத்தில், அவரது வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்த அவரது மனைவி மறைந்தது மலேசிய திரைத்துறையில் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கடந்த புதன்கிழமை கே.எஸ்.மணியம் அவர்களின் மனைவி காலமானார். இதன் காரணமாக விருது வழங்கும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ள இயலாத நிலை எற்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விருது விழா தொடங்கும் முன்னரே கே.எஸ்.மணியம் அவர்களின் மனைவிக்காக ஒரு சில நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்றவர்கள்
2014-ம் ஆண்டின் சிறந்த படம் வெண்ணிற இரவுகள், சிறந்த நடிகர் அகோந்திரன் (கைதியின் அகராதி), சிறந்த நடிகை சங்கீதா (வெண்ணிற இரவுகள்), சிறந்த குணச்சித்திர நடிகர் தங்கமணி (வெட்டி பசங்க), சிறந்த குணச்சித்திர நடிகை மலர்விழி (வெட்டி பசங்க), சிறந்த புதுமுக நடிகர் ராபிட் மேக் (மைந்தன்), சிறந்த புதுமுக நடிகை ஷைலா நாயர் (மைந்தன்), சிறந்த நகைச்சுவை நடிகர் கானா (விக்டரி), சிறந்த பாடலாசிரியர் யுவாஜி (ஒரே ஒரு சொல்லில் – வெட்டி பசங்க), சிறந்த இசையமைப்பாளர் லாரன்ஸ் சூசை (வெண்ணிற இரவுகள்), சிறந்த இயக்குநர் – ஆர்.பிரகாஷ் ராஜாராம் (வெண்ணிற இரவுகள்), சிறந்த பாடகர் திலீப் வர்மன் (என் உயிரே – வெட்டி பசங்க), சிறந்த பாடகி ரேணுகா ஸ்ரீ (ஒரே ஒரு சொல்லில் – வெட்டி பசங்க), சிறந்த பாடல் ( அழகான பனிக்காற்று – விக்டரி), சிறந்த ஒளிப்பதிவாளர் மனோ வி நாராயணன் (வெண்ணிற இரவுகள்), சிறந்த சண்டைப் பயிற்சியாளர் ரூபன் (விக்டரி), சிறந்த படத்தொகுப்பாளர் ப்ரேம்நாத் (மைந்தன்).
2014-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி, டிவிடி பட வரிசையில், சிறந்த படம் உணர்வு, சிறந்த நடிகர் ஹரிதாஸ் (உணர்வு), சிறந்த நடிகை சங்கீதா(உணர்வு), சிறந்த குணச்சித்திர நடிகர் சுதாகர் (ஒற்றுமை பாலம்), சிறந்த குணச்சித்திர நடிகை கமீஷா (உணர்வு), சிறந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ராஜ் (ஹோரோஸ்கோப்), சிறந்த இயக்குநர் சஷிதரன்(உணர்வு), சிறந்த ஒளிப்பதிவாளர் உதயகுமார் (உணர்வு).
2014-ம் ஆண்டின் சிறந்த குறும்படங்களுக்கான வரிசையில், சிறந்த படம் – அறிந்தும் அறியாமலும், சிறந்த நடிகர் – கர்ணன் (நேற்று அவள் இருந்தாள்), சிறந்த நடிகை அம்மு திருஞானம் (அவள் ஒரு பெண்), சிறந்த குணச்சித்திர நடிகர் மகேசன் பூபாலன் (நேற்று அவள் இருந்தாள்), சிறந்த பாடலாசிரியர் ஓவியா (இதயம் வலி தாங்கவே), சிறந்த இசையமைப்பாளர் ஜெய்ராகவேந்திரா (நல்லதோர் வீணை செய்தேன்), சிறந்த இயக்குநர் விக்னேஷ் லோகராஜ் (அறிந்தும் அறியாமலும்), சிறந்த பாடல் – இதயம் வலி தாங்கவே, சிறந்த ஒளிப்பதிவாளர் – ராவ்யன் மனோகரன் (அறிந்தும் அறியாமலும்), சிறந்த காணொளி பாடல் (அடியே கிறுக்கி)
இது தவிர, சிறந்த ஆண் அறிவிப்பாளராக டெனிஸ் குமார், சிறந்த பெண் அறிவிப்பாளர் அகிலா, சிறந்த ஆண் வானொலி அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச்செல்வன், சிறந்த பெண் அறிவிப்பாளர் ரேவதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
– ஃபீனிக்ஸ்தாசன்