ஆக்லாந்து, மார்ச் 2 – உலக கோப்பை கிரிக்கெட் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து, தொடர்ச்சியாக 4-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக பிஞ்ச், வார்னர் களமிறங்கினர்.
ஆஸ்திரேலியா 32.2 ஓவரிலேயே 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
மெக்கல்லம் – வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்தது. 20 ஓவரில் போட்டியை முடிக்க வேண்டும் என்ற முடிவோடு விளையாடிய மெக்கல்லம் 21 பந்தில் அரை சதம் அடித்தார். நியூசிலாந்து 23.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது.
3-வது வீரராகக் களமிறங்கிய வில்லியம்சன் 45 ரன்னுடனும் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கடைசி வீரர் போல்ட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி.