பார்சிலோனா, மார்ச் 3 – நம் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து விட்ட செல்பேசிகளும் இணையமும், வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் தொழில் என்பது உலகறிந்த உண்மை.
நம் தொலைத் தொடர்பு பயன்பாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் பலதரப்பட்ட சேவைகளை செய்து வருகின்றன. இவை நாடு விட்டு நாடு வேறுபடும். அவற்றின் வர்த்தகமும் நாடுகளுக்கு தகுந்தார் போல் மாறுபடும்.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் செல்பேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதன் காரணமாக ‘செல்பேசி வலையமைப்பு’ (cellular network) நிறுவனங்களின் எண்ணிக்கையும், முதலீடுகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதனை நன்கு உணர்ந்துள்ள கூகுள், தனது அடுத்த இலக்காக உலகளாவிய செல்பேசி வலையமைப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தத் இருக்கிறது. இதற்கான மறைமுக அறிவிப்பினை கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை, நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்தார்.
இது குறித்துஅவர் கூறியதாவது:- “வரும் மாதங்களில் கூகுளிடமிருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். வன்பொருட்களையும், மென் பொருட்களையும் ஒன்றிணைக்கும் வலையமைப்பில் ஒரு புதுமை தேவைப்படுகிறது”.
“அதனை செய்ய கூகுள் தயாராகி வருகிறது. எங்கள் நோக்கம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி அளிப்பதல்ல. புதுமையை புகுத்துவது தான்” என்று அவர் கூறியுள்ளார்.
வன்பொருட்களையும், மென்பொருட்களையும் ஒன்றிணைக்கும் வலையமைப்பு என்று அவர் கூறுவது செல்லுலார் வலையமைப்பு தான் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்கு நாடு செல்லுலார் நிறுவனங்கள் வேறுபடுகையில், கூகுள் போன்ற ஒரு நிறுவனம், உலக அளவில் செல்பேசி வலையமைப்பு திட்டத்தில் ஈடுபடுவதால், உலகளாவிய செல்பேசிகளுக்கான சேவையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.