Home தொழில் நுட்பம் சூரிய சக்தி விமானங்கள் மூலம் இணையம் – பேஸ்புக் திட்டம்!

சூரிய சக்தி விமானங்கள் மூலம் இணையம் – பேஸ்புக் திட்டம்!

521
0
SHARE
Ad

Suntoucher-Solar-Powered-Aircraft-1-640x479புதுடெல்லி, மார்ச் 6 – பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வெளித் தொடர்புகள் இல்லாத கிராமப் பகுதிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்புதலைப் பெறவும், இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India)-ல் இத்திட்டத்தை இணைக்கவும், பேஸ்புக் நிறுவனம் முயன்று வருகிறது.

சமீபத்தில் பார்சிலோனாவில் நடந்த அனைத்துலக செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் அடுத்தடுத்த திட்டங்களை அறிமுகம் செய்தன.

#TamilSchoolmychoice

கூகுள் நிறுவனம், செல்லுலார் வலையமைப்பு பற்றியும், அண்டிரொய்டு பே திட்டம் பற்றி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த இருக்கும் தனது அடுத்த திட்டங்களை தெளிவுபடுத்தியது.

சமீபத்தில் பேஸ்புக், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘இண்டர்நெட்.ஓஆர்ஜி’ (Internet.org) என்ற பெயரில் இலவச இணைய சேவையை செயல்படுத்தியது.

ஆனால் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் இணைய சேவைக்கு அடிப்படைத் தேவையான ‘ஒளியிழை’ (Optical fiber) வசதி இல்லாததால் அந்த திட்டம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து விமானம் மூலம் இணைய வசதியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான கிரிஸ் டேனியல் கூறுகையில், “சூரிய சக்தி விமானங்கள் மூலம் இணையம் வழங்கும் முயற்சி பற்றி நங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்”.

“இது மிக உயரத்தில் சுற்றி வருவதால் அதிக பரப்பளவிலான பகுதிகளுக்கு இணைய சேவையை வழங்க முடியும். இதற்கு என எரிபொருள் தேவையில்லை. அதனால் இந்த திட்டம், இந்தியா போன்ற நாடுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்“ என்று தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.