கேனபெரா, மார்ச் 6 – எம்எச்370 விமானம் மாயமாகி வரும் 8-ம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாக உள்ள நிலையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
அப்போது, ஆஸ்திரேலியாவுக்கான மலேசிய தூதர் டத்தோ சைனால் அபிடின் அகமட் மற்றும் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், தேடுதல் நடவடிக்கையில் கடந்தாண்டு காட்டப்பட்ட தீவிரம் நீடிக்குமென தம்மால் தற்போது உறுதியளிக்க இயலாது என்றார்.
எனினும், விமானம் மாயமான புதிரை விடுவிப்பது தொடர்பில் ஆஸ்திரேலியா தலைமையேற்றுள்ள தேடுதல் குழு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அவர் உறுதியளித்தார்.
“ஓராண்டு நிறைவு பெறுகிறது என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது வலியும், வேதனையும் மிகுந்தது. எம்எச்370 சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குடும்பத்தாரும் எங்களது நினைவுகளிலும் பிரார்த்தனையிலும் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதே இந்த நாடாளுமன்றம் தெரிவிக்கும் செய்தி.”
“கடந்த ஓராண்டு காலமாக வேதனையில் உழலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விமானத்தை தேடும் பணி என்பது அனைத்துலக அளவிலான ஒத்துழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு,” என்றார் டோனி அப்பாட்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள நிச்சயமற்ற நிலைமுடிவுக்கு கொண்டு வரப்படும் என ஆஸ்திரேலியா உறுதியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
“செயற்கைக்கோள் மூலம் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் மாயமான விமானம் தனது பாதையிலிருந்து நேர்க்கோட்டில் திரும்பி தெற்கு இந்தியப் பெருங்கடலில் மாயமாகி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தேடுதல் வேட்டையை ஆஸ்திரேலியா மேற்கொண்டது. விமானத்தை தேடும் கடற்பரப்பு உலகின் மிக கரடுமுரடான, கொந்தளிப்பான பகுதி,” என்றார் டோனி அப்பாட்.