கோலாலம்பூர், மார்ச் 6 – பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக மலேசிய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு அனைத்துலக நாணய நிதியம் (IMF) பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகள் மலேசிய பொருளாதாரம் பற்றி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் பொருளாதாரம் மக்களுக்கு சாதகமானதாக உள்ளது.
தனி நபர் வருவாய் அதிகரிப்பு, பொருட்களின் விலை குறைப்பு போன்றவை மக்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளன. அதே சமயம் முதலீடுகளில் தேவையான அளவில் வளர்ச்சியும் உள்ளதால் நிறுவனங்களின் வருவாயும் பெருகி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஐஎம்எப்-ன் நிர்வாகக் குழு கூறியிருப்பதாவது:-
“முதலீடுகள் அதிகரிக்க மலேசிய அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிகளால் தனி நபர் வருவாய், உள் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவை தேவையான அளவில் முன்னேறி உள்ளது. அதற்கு மிகக் முக்கிய காரணம் மலேசியாவின் வட்டார ஒருமைப்பாடு. இதன் மூலம் முதலீடுகள் மட்டுமல்லாது உற்பத்தியும் அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளனர்.
மேலும், “மலேசியப் பொருளாதாரம் சிறிய இடர்களால் சரிந்து போகும் அபாயம் கொண்டவையாக இல்லை. வலுவான கொள்கை கட்டமைப்புகள் மற்றும் ஆரோக்கியமான நிதி அமைப்புகளால் பலமிக்கதாக உள்ளது” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2015-ம் ஆண்டைப் பொருத்தவரை மலேசியப் பொருளாதாரம் 4.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.